பங்களாதேஷிடம் இலங்கை மகளிர் ஏ அணிக்கு தோல்வி

febr16

பாங்கொக்கில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடரில் இலங்கை ஏ அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷிடம் 4 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

பி குழுவுக்காக நேற்று முன்தினம் (14) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 19.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சுழற்பந்து வீராங்கனை சச்சினி நிசன்சலா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். எனினும் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களையே பெற்றது.

ஹன்சிமா கருணாரத்ன அதிகபட்சமாக 31 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகவே ஆரம்ப சுற்று போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அணி இன்று மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.