பெலிகன்ஸ் – ஜாவா லேன் மோதலுடன் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 இன்று ஆரம்பம்

jan30

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று (29) வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய போட்டிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

மொத்தமான 14 அணிகளின் பங்கேற்புடன் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் இத்தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த நிலையில், ஏ மற்றும் பி குழுக்களில் முதல் நான்கு இடங்களையும் பெற்ற தலா 4 அணிகள் என மொத்தம் 8 அணிகள் இந்த சுப்பர் 8 சுற்றில் மோதவுள்ளன. இதில் இன்றைய முதல் போட்டியில், முதல் சுற்றில் பி குழுவில் முதல் இடத்தைப் பிடித்த பெலிகன்ஸ் அணி ஏ குழுவில் நான்காம் இடத்தைப் பெற்ற ஜாவா லேன் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி மாலை 4.45 மணிக்கு கொழும்பு குதிரைப்பந்தய திடல் அரங்கில் ஆரம்பமாகும்.

இன்று இரவு 8.30 மணிக்கு இதே அரங்கில் இடம்பெறும் அடுத்த போட்டியில் ஏ குழுவில் முதல் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் வீரர்கள் பி குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை பொலிஸ் அணியை எதிர்த்தாடவுள்ளனர்.

அதேபோன்று, நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள முதல் போட்டியில் செரண்டிப் அணி, யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணியை எதிர்த்தாடவுள்ள அதேவேளை, இரண்டாவது போட்டியில் நியூ ஸ்டார் அணி, சொலிட் அணிக்கு எதிராக களம் காணவுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த முதல் சுற்று குறித்து பார்க்கும்போது, ஏ குழுவில் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 2 சமநிலையான முடிவுகளுடன் 14 புள்ளிகளைப் பெற்ற சோண்டர்ஸ் வீரர்கள் தோல்வி காணாத அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினர்.

அதேபோன்று, அதே குழுவில் 6 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவுகளைப் பெற்ற நியூ ஸ்டார் மற்றும் செரண்டிப் அணிகள் (13 புள்ளிகள்) முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற, 6 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 சமநிலையான முடிவுகளைப் பெற்ற ஜாவா லேன் அணி 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.

அதேபோன்று, பி குழுவில் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 3 சமநிலையான முடிவுகளுடன் பெலிகன்ஸ் அணி (12 புள்ளிகள்) முதல் இடத்தைப் பெற, 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் பொலிஸ் அணி (12 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும், 3 வெற்றி, இரண்டு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்ற சொலிட் அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதேவேளை, பெலிகன்ஸ் அணிக்கு எதிரான இறுதி வாரப் போட்டியை சமநிலையில் முடித்த சென் மேரிஸ் அணியினர் 8 புள்ளிகளுடன் இக்குழுவில் இறுதி அணியாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.

இந்த தொடரில் முதல் சுற்று நிறைவில் நியூ ஸ்டார் அணியின் மொஹமட் பசால், ஜாவா லேன் அணி வீரர்களான ஹர்ஷன சுமுது, ஒலவாலெ மற்றும் செரண்டிப் அணியின் இளம் வீரர் விஜயகுமார் அபிஷான் ஆகியோர் தலா 5 கோல்களைப் பதிவு செய்து அதிக கோல் பெற்றவர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.