– பங்களாதேஷை வெளியேற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பு
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டியைப் புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அடுத்த வாரத் தொடக்கத்தில் இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்து ஒரு விசேட காலக்கெடுவை அறிவித்துள்ளது.
இலங்கையில் பல போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தீர்மானம் கிரிக்கெட் உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இத்தொடரிலிருந்து பங்களாதேஷை நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) எடுத்த முடிவை சந்தேகத்துடன் பார்ப்பதாக பாகிஸ்தான் தெரிவித்து வருகின்றது.
பாகிஸ்தான் தற்போது இரண்டு முக்கிய முடிவுகளைப் பரிசீலித்து வருகிறது, இத்தொடரிலிருந்து முழுமையாக விலகுவது; பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரில், அதிக இரசிகர்களின் வருகையை கொண்ட பாகிஸ்தான் போன்ற ஒரு முன்னணி அணி விலகுவது, ஐசிசி மற்றும் இலங்கைக்கு பாரிய வர்த்தக மற்றும் இராஜதந்திர ரீதியான பாதிப்பை (Commercial and diplomatic disaster) ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடாத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாவிட்டால் அது இரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வமாக பங்களாதேஷிற்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் இத்தொடருக்கான பங்கேற்பு குறித்த இந்த இழுபறிநிலையை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள போதிலும், ICC இற்குள் நிலவும் இந்தியாவின் (BCCI) ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு இராஜதந்திர நகர்வாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பங்களாதேஷில் இடம்பெற்ற இந்து மத விரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து, கொல்கத்தா அணி ஏலம் எடுத்திருந்த பங்களாதேஷ் அணி வீரர் முஸ்தபிசுரை IPL போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் பங்களாதேஷ் அணி, இந்தியாவில் தமது வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லையெனவும் தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் தெரிவித்து வந்தது.
ஆயினும் அதனை மறுத்த ICC அவ்வாய்ப்பை ஸ்கொட்லாந்து அணிக்கு வழங்கியிருந்தது.
அத்துடன் தமது நாட்டில் IPL ஒளிபரப்பை தடை செய்வதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


