– பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க அரசாங்கம் அதிரடி
இலங்கை அரசாங்கம் தேசிய மகளிர் ஆணைக்குழுவை (National Commission for Women) நடைமுறைப்படுத்தத் தயாராகி வருவதாகவும், இது பாலின நீதியை நிலைநாட்டுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
‘சண்டே அப்சர்வர்’ (Sunday Observer) பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், இந்த ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் பரிந்துரைகள் தொடர்பில் கூட விசாரணை நடத்தும் அதிகாரம் உள்ளிட்ட பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதிகரித்து வரும் இணையம் சார்ந்த பாலின ரீதியிலான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு எதிராகக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரிக்கும் அதிகாரமும் இதற்கு உண்டு. இந்த ஆணைக்குழு தற்காலிகமாக மகளிர் விவகார அமைச்சின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், அதன் நடவடிக்கைகள் முழுமையான சுதந்திரத்துடன் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் ஊடகத் தணிக்கையை மேற்கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதி அமைச்சர், அரசாங்கத்தின் கவனம் அடக்குமுறையில் அல்லாமல், பொறுப்புக்கூறத்தக்க அறிக்கையிடல் மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதிலேயே உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
“அரசாங்கம் உண்மையாகவே ஊடகத் தணிக்கையை மேற்கொண்டால், இன்று பல ஊடக நிறுவனங்களுக்கு இயங்க வாய்ப்பு கிடைத்திருக்காது” எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நிலவிய ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைக் கலாச்சாரத்திலிருந்து நாடு தற்போது விடுபட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.


