இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவின் அதிரடி பந்துவீச்சால் சில்ஹட் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான பங்களாதேஷ் பிரீமியர் லீக் ‘குவலிபயர் 2’ போட்டியில் 12 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ராஜ்ஷஹி வொரியஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராஜ்ஷஹி வொரியஸ் 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. கேன் வில்லியம்சன் 38 பந்துகளில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த சில்ஹட் டைட்டன்ஸ் வெற்றிக்காக கடைசி வரை போராடியது. என்றபோதும் அபாரமாக பந்துவீசிய பினுர பெர்னாண்டோ 4 ஓவர்களுக்கும் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதனால் சில்ஹட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களையே பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் பினுர பெர்னாண்டோ தெரிவானார்.
ராஜ்ஷஹி வொரியஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (23) சட்டொக்ராம் றோயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


