பங்களாதேஷ் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற கோரிக்கை

janu5

ஐ.பி.எல். இல் முஸ்தபிஸுரை நீக்கியதால் பதற்றம்

இந்திய பிரீமியர் லீக் தொடரில் இருந்து பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் தமது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலிடம் (ஐ.சி.சி.) கோரவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி தனது முதல் மூன்று குழு நிலைப் போட்டிகளையும் கொல்கத்தாவில் ஆடவுள்ளது. எனினும் தமது வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை வெளியிட்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அது குறித்து ஐ.சி.சி. இடம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பணிப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (03) நடைபெற்றது. இதனையடுத்து கருத்து வெளியிட்ட ஊடகக் குழு தலைவர் அம்சாத் ஹுஸைன், ‘டி20 உலகக் கிண்ணத்தில் கொல்கத்தாவில் எமக்கு மூன்று போட்டிகள் உள்ளன. அது பற்றி நாம் ஐ.சி.சி. இற்கு எழுதுவோம்’ என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபஸுர் ரஹ்மானை கடந்த சனிக்கிழமை விடுவித்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலை அடுத்தே கொல்கத்தா இந்த முடிவை எடுத்தது. கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா அணி முஸ்தபிஸுரை இந்திய நாணயப்படி 9.2 கோடி ரூபாவுக்கு வாங்கியது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். இல் ஆடும் ஒரே பங்களாதேஷ் வீரராகவே அவர் இடம்பெற்றிருந்தார்.

இது குறித்து இந்திய சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அங்கு நிலவும் சமீபத்திய சூழல்களைக் கருத்தில் கொண்டு, முஸ்தபிஸுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு மாற்று வீரரை அவர்கள் கோரினால், அதற்கு இந்திய சபை அனுமதி வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த முடிவுக்கான உறுதியான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், அண்டை நாடான பங்களாதேஷில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதன் பின்னணியில், பங்களாதேஷ் வீரரை அணியில் சேர்த்ததற்காக கொல்கத்தா அணி மற்றும் அதன் உரிமையாளர் ஷாருக்கான் மீது சில இந்திய ஆன்மிக மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்ததே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் இடைக்கால அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் அரச செய்தி நிறுவனமான பி.எஸ்.எஸ். இற்கு கூறியதாவது, ‘எந்த சூழ்நிலையிலும் பங்களாதேஷ் கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பங்களாதேஷ் மீதான எந்த ஒரு அவமதிப்பையும் எம்மால் ஏற்க முடியாது’ என்றார். ‘அடிமை யுகம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஐ.சி.சி. இற்கு எழுதும்படி பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை தாம் அறிவுறுத்தியதாகவும் நஸ்ருல் குறிப்பிட்டுள்ளார். ‘ஐ.சி.சி. இற்கு இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் விளக்கும்படி பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை நான் அறிவுறுத்தினேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலகக் கிண்ண போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்களாதேஷ் தனது 4 குழுநிலை போட்டிகளையும் இந்தியாவிலேயே ஆடவுள்ளது. ஏற்கனவே இந்தியா செல்லாத பாகிஸ்தான் அணி தனது போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது.

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியான முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை பதவி நீக்கிய 2024 மக்கள் பங்களாதேஷ் போராட்டம் தொடக்கம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான பங்களாதேஷில் சிறுபான்மைக்கு எதிரான வன்முறையை இந்திய வெளியுறவு அமைச்சு கடந்த மாதம் கண்டித்திருந்தது. இந்த வன்முறையை இந்தியா மிகைத்துக் கூறுவதாக பங்களாதேஷ் இடைக்காலத் தலைவர் முஹமது யூனிஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

முஸ்தபிஸுர் ஐ.பி.எல். இல் இருந்து நீக்கப்படுவது குறித்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னரே, எதிர்வரும் மார்ச் மாதம் இந்திய அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. இப்போது இந்தத் தொடர் குறித்தும் ஐயம் எழுந்து வருகிறது.

இந்தத் தொடர் ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் பங்களாதேஷ் மகளிர் அணியின் அண்மைய இந்திய சுற்றுப்பயணமும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.