தனஞ்சய டி சில்வா தொடர்பிலும் முக்கிய அவதானம்
டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் குழாத்தை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் இரண்டு அல்லது மூன்று மாற்று வீரர்களை மதிப்பீடு செய்யவிருப்பதாக இலங்கை தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட குழாத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் இலங்கையின் மாற்று வீரர்களை பலப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர் தீர்க்கமானதாக அமையும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின்போது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் நாம் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளோம். அதனை சரி செய்த பின், டி20 உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட இறுதி அணியை நாம் அறிவிப்போம். அந்தக் குழாம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடும்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தொடரின்போது தேவை ஏற்பட்டால் எந்தவித தடையுமின்றி உடனடியாக அணிக்குள் இயங்கக் கூடிய வீரர்களை அடையாளம் காண்பதில் தேர்வுக் குழுவினர் ஆர்வமாக இருப்பதாகவும் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘டி20 சர்வதேச குழாத்திற்காக வலுவான மாற்று வீரர்களை தயார்படுத்துவதற்கு, பாகிஸ்தான் தொடரின்போது சில வீரர்களை நாம் முயற்சிக்கவுள்ளோம். இந்தத் தொடரில் இருந்து, 11 பேரில் எந்த ஒரு வீரரையும் மாற்ற முடியுமான மேலதிக வீரர்களை தேர்வு செய்யவுள்ளோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா டி20 குழாத்திற்கு அழைக்கப்பட்டிருப்பது அதிக அவதானம் பெற்றுள்ளது. அவர் கடைசியாக 2024 ஜூனில் நடந்த டி20 உலகக் கிண்ணத்திலேயே டி20 சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார்.
டி20 போட்டிகளில் தனஞ்சய டி சில்வாவின் பங்களிப்புப் பற்றி தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
‘நாம் தனஞ்சயவை அணிக்குள் இணைத்திருப்பதோடு பயிற்சிப் போட்டிகளில் நாம் அவரை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். நாம் ஆலோசனை மட்டத்திலேயே தொடர்ந்து இருக்கிறோம்’ என்றார்.
தனஞ்சயவை பதினொருவர் அணியில் சேர்த்தால் இலங்கை அணியின் சமநிலைக்கு உதவுவார் என்று நம்புவதாகவும் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
‘தனஞ்சயவை நாம் விளையாட வைத்தால் அவர் முன்னணியில் துடுப்பெடுத்தாடுவார் என்பதோடு தனது பங்கிற்கு நான்கு ஓவர்களை வீசுவார். இது நாம் 7–4 (7 துடுப்பாட்ட வீரர் – 4 பந்துவீச்சாளர்) கலவையுடன் ஆடும்போது ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான பிரச்சினையை தீர்ப்பதாக அமையும். அவ்வாறான கலவை ஒன்றையே நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் விக்ரமசிங் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை அணி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தலா மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


