சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஹோட்டல் மதுபானசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற ஹோட்டல் பாரில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
அச்சமயம் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றி இருந்துள்ளனர். பட்டாசு வெடி சத்தத்துக்கு மத்தியில் கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் இத்திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நிகழ்ந்த சிறிய இடத்தில் ஏராளமானோர் குவிந்திருந்ததால் பாதிப்பு அதிகரித்துள்ளது. விபத்து நிகழ்ந்தவுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான அம்புலன்ஸ்களும் ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பி.பி.சி


