கொழும்பு மாநகர சபை 2026 பட்ஜெட் நிறைவேற்றம்

colombo municipal council budget passed
– கடந்த வாரம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மேயர் பல்தசாரின் பட்ஜெட்டிற்கு மீண்டும் வெற்றி

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அதிகாரத்தின் கீழ் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், அதன் இரண்டாவது வாசிப்பின் போது இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்தசார் அவர்களால் சபையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான கன்னி வரவு செலவுத் திட்டம் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் முறையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், அந்த சந்தர்ப்பத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் கிடைத்தன.

இதன் காரணமாக முதற்கட்ட வாக்கெடுப்பில் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்ட நிலையில், சபை நிர்வாகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறானதொரு சூழலிலேயே, மேயர் விராய் கெலி பல்தசார் இன்று மீண்டும் பட்ஜெட்டைச் சமர்ப்பித்து, இரண்டு மேலதிக வாக்குகளால் அதன் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

2026 பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள்:
• நகரத் தூய்மை மற்றும் உள்கட்டமைப்பு: “எமது நகரைத் தூய்மையாக வைத்திருப்போம்” திட்டத்தின் கீழ் திண்மக்கழிவுகளை அகற்ற 3,560 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் வடிகால் அமைப்புகளைப் பராமரிக்க 3,250 மில்லியன் ரூபாயும், மாநகர வீதிகளை அமைக்கவும் சமிிக்ஞை விளக்குகளைப் பொருத்தவும் 1,400 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• பொதுச் சுகாதாரம்: சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் 2,063 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகளை வெறிநாய்க்கடியிலிருந்து பாதுகாக்கவும், அது சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும் 89 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
• ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு: முன்பள்ளி ஆசிரியர்களின் ஊக்கக் கொடுப்பனவு 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக (10,000 ரூபா அதிகரிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது.
• சமூக மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல்: நூலகச் சேவைகளை நவீனமயமாக்க 183 மில்லியன் ரூபாயும், விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்க 143 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. விசேடமாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நூலகத்தைப் பயன்படுத்த நவீன வசதிகளை ஏற்படுத்த 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
• தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு: தீயணைப்புப் பிரிவை வலுப்படுத்தவும் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கவும் 552 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
• உறுப்பினர் நிதி: சபையின் வரலாற்றில் முதன்முறையாக, 117 உறுப்பினர்களுக்கும் தலா 5 மில்லியன் ரூபா வீதம் மொத்தம் 585 மில்லியன் ரூபா உறுப்பினர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
• நிர்வாக மேம்பாடு: பொதுச் சேவைகளை வெளிப்படைத்தன்மையுடன் வழங்க டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்காக 37.7 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரின் விரைவான வளர்ச்சிக்காக அரசு-தனியார் பங்களிப்பு (PPP) திட்டங்களை ஆரம்பிக்கவும், உள்ளூர் உணவுகள் மற்றும் ஆயுர்வேதப் பொருட்களை ஊக்குவிக்க ஒவ்வொரு கடைக்கும் 5 மில்லியன் ரூபா வீதம் வழங்கவும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டமானது “செல்வம் மிக்கதொரு நகரில் அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை தே.ம.ச. வசமானது