உலக ரேபிட் செஸ்: கார்ல்சனுக்கு அதிர்ச்சி தோல்வி – ஹம்பி மற்றும் நிமேன் அபார முன்னேற்றம்!

dec28

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஃபிடே (FIDE) உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் பரபரப்பான திருப்பங்களுடன் நிறைவடைந்தது. உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் தோல்வியைத் தழுவ, ரஷ்யாவின் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ் மற்றும் அமெரிக்காவின் ஹான்ஸ் நிமேன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

முதல் நாளில் 4.5 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்திய நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இரண்டாம் நாளில் கடும் சவாலை எதிர்கொண்டார்.

ஏழாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ்விடம் (Vladislav Artemiev) கார்ல்சன் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆட்டத்தின் 15-வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த ஒரு சிறிய தவறு அவருக்கு தோல்வியைத் தேடித்தந்தது.

இருப்பினும், கடைசி இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றதன் மூலம் கார்ல்சன் மீண்டும் புள்ளிப் பட்டியலில் டாப் வரிசைக்கு முன்னேறினார்.

தற்போது விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ் மற்றும் ஹான்ஸ் நிமேன் (Hans Niemann) ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மகளிர் பிரிவு: முதலிடத்தில் கொனேரு ஹம்பி

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான கோனேரு ஹம்பி, இரண்டாம் நாளில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

8 சுற்றுகளின் முடிவில் ஹம்பி மற்றும் சீனாவின் ஜூ ஜினர் (Zhu Jiner) ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் கூட்டாக முதலிடத்தில் உள்ளனர்.

இரண்டாம் நாளில் 4 போட்டிகளில் விளையாடிய ஹம்பி, 3.5 புள்ளிகளைக் குவித்து தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரங்களான டி. குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இரண்டாம் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குகேஷ் முக்கியமான சில வெற்றிகளைப் பதிவு செய்து இன்னும் சாம்பியன்ஷிப் போட்டியில் நீடிக்கிறார்.