பேரிடர் நிவாரணமாக இலங்கைக்கு கடன் சலுகை?

dailynews650 58

நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட 120 முன்னணி உலகப் பொருளாதார நிபுணர்கள் குழு, இலங்கையின் கடன் செலுத்தல்களை இடைநிறுத்தி, கடன் நிலைத்தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டுமென வரவேற்கத்தக்க மற்றும் சரியான நேரத்திலான அழைப்பினை விடுத்துள்ளனர். அவர்களின் தலையீடு, அடிக்கடி வாய்மொழியாக ஒப்புக்கொள்ளப்படும் ஆனால் நடைமுறையில் எதிர்க்கப்படும் ஒரு கொள்கையை வலியுறுத்துகிறது. தேசிய பேரிடர் நேரங்களில், கடன் நிவாரணமே பேரிடர் நிவாரணமாக மாறுகிறது. இலங்கைப் பொருளாதாரத்துக்கு இத்தகைய அணுகுமுறை நிச்சயமாக ஒரு ஆசுவாசத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, இலங்கை ஆண்டுகளாக அனுபவித்துவந்த கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போதுதான் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட தித்வா புயலால் இலங்கை மீண்டும் ஒரு மனிதாபிமான மற்றும் பொருளாதார அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது, இது ஏற்கனவே காண்பித்த மீட்சிக்கான அறிகுறிகளை நிச்சயம் பாதிக்கவே செய்யும். நிலைத்தன்மையை அடைவதற்கு போராடும் நாட்டில் தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவு, திடீரென தேசிய முன்னுரிமைகளை மாற்றியுள்ளது, இத்தகைய சூழலில், பொருளாதார நிபுணர்களின் அழைப்பு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றம் நிதி ஒழுங்கீனம் அல்ல

தித்வா புயல், நிதி மோசடி அல்லது கொள்கைத் தவறால் ஏற்பட்டது அல்ல. இது வெளிப்புறமான, காலநிலையால் தூண்டப்பட்ட அனர்த்தம், இலங்கை போன்ற காலநிலைப் பாதிப்புக்கு உள்ளான பொருளாதாரங்களை, அதிகமாக பாதிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்று. வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள், சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள், அழிந்த வீடுகள், சீர்குலைந்த விவசாயம் ஆகியவை வளர்ச்சியை மந்தமாக்கும், வருவாய் சேகரிப்பை பலவீனப்படுத்தும், பொது செலவின தேவைகளை அதிகரிக்கும்.

இத்தகைய நிபந்தனைகளின் கீழ் புயலுக்கு முந்தைய கடன் செலுத்தல் கால அட்டவணைகளை இலங்கை கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது, வெளிநாட்டு கடனாளிகளுக்கு சேவை செய்வதற்கும் குடிமக்களுக்கு அவசர மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இடையே அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தேர்வுகளுக்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொருளாதார நிபுணர்களின் அழைப்பு, இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளை சரியாக விளங்கிக் கொள்வதால் எழுந்தது. இது சலுகை பற்றியது அல்ல, பொருளாதார யதார்த்தம் மற்றும் ஒழுக்கப் பொறுப்பு பற்றியது.

கடன் நிலைத்தன்மை மற்றும் இலங்கையின் கடன் சுமை

கடன் நிலைத்தன்மை கண்ணோட்டத்தில், தற்போதைய மறுசீரமைப்பு கட்டமைப்பின் கீழ் கூட இலங்கையின் செலுத்தல் கடமைகள் மிகுந்த சுமையைத் தருவனவாகவே உள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை முன்னறிவிப்புகளின்படி, 2024 – 2026 காலத்துக்காக இலங்கையின் வெளிநாட்டு கடன் சேவை ஆண்டுக்கு அண்ணளவாக 4–5 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டது, மறுசீரமைப்பு நிவாரணத்தின் முழுமையான தாக்கம் உணரப்படுவதற்கு முன். ஒப்புக்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்குப் பிறகு கூட, செலுத்தல்கள் மீண்டும் தொடங்கியதும் அரசாங்க வருவாயில் 20% க்கும் மேலான தொகையையும் மற்றும் அந்நிய செலாவணி வரவுகளின் கணிசமான பங்கையும் உறிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMF கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு நிலையான வளர்ச்சி மீட்சி, மேம்பட்ட வருவாய் திரட்டல், நிலைத்தன்மைப்படுத்தப்பட்ட முதன்மை இருப்புகள் ஆகியவை போன்ற அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. தித்வா புயல் இந்த அனுமானங்களை பலவீனப்படுத்துகிறது. வளர்ச்சி முன்னறிவிப்புகள் மாற்றமுறுகின்றன, வருவாய்கள் சீர்குலைக்கப்படுகின்றன, செலவின தேவைகள் கூர்மையாக உயர்கின்றன. இத்தகைய அதிர்ச்சியை எதிர்கொண்டு முன்னர் பேச்சுவார்த்தை செய்யப்பட்ட செலுத்தல் பாதைகளை கடுமையாக கடைப்பிடிக்க வலியுறுத்துவது, மறுசீரமைப்பு பாதுகாக்க வேண்டிய நிலைத்தன்மையையே சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

தித்வா புயலின் ஆரம்ப மதிப்பீடுகள் பல மாகாணங்களில் பல இலட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் காட்டுகின்றன, வீடுகள், போக்குவரத்து வலையமைப்புகள், நீர்ப்பாசன அமைப்புகள், மின்சார விநியோகம், விவசாய நிலங்களின் சேதம் என்பனவற்றின் ஆரம்ப மதிப்பீடுகள் நேரடி பொருளாதார இழப்புகளை 1–2 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற வரையறைக்குள் வைக்கின்றது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1% க்கும் மேலானதாகும். விவசாயம், சிறு வணிகங்கள், பொது உட்கட்டமைப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் அடங்கும்.

அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதன் பொருளாதார தாக்கம்

அரசாங்கம் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர நிவாரண மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈட்டுத் தொகைகள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு சலுகைக் கடன் மற்றும் கடன் செலுத்துகை சலுகைகள், விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மீட்டெடுக்க உதவி, சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன அமைப்புகள், மின்சார விநியோகம் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளை சீர்செய்ய துரிதப்படுத்தப்பட்ட பொதுச் செலவு ஆகியவை அடங்கும். இந்தத் தலையீடுகள் வாழ்வாதாரங்களை நிலைப்படுத்த, பிராந்திய பொருளாதாரங்கள் சுருங்கிப்போவதைத் தடுக்க அவசியமானவை.

2004 சுனாமிக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட நாடுகள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க, கடன் இடைநிறுத்தங்கள் மற்றும் சலுகைக் கடன் மறுசீரமைப்புகளால் பயனடைந்தன.

தித்வா புயல் இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டை தீவிரப்படுத்த ஒரு குறுகிய ஆனால் முக்கியமான சாளரத்தை திறந்துள்ளது. கடன் நிவாரணத்தை சலுகையாக அல்ல, நிலைத்தன்மை, மீட்சி, நீண்டகால செலுத்தல் திறனில் முதலீடாக வடிவமைக்கும் நேரம். தற்போதைய நெருக்கடியை மதிநுட்பமாகப் பயன்படுத்துவதே தற்போதைய தேவை.

தித்வா புயலுக்குப் பிறகு இலங்கையின் கடன் செலுத்தல்களை இடைநிறுத்த வேண்டுமென சர்வதேச நிபுணர்கள் விடுத்த அழைப்பு சரியான நேரத்தில், தர்க்கரீதியானது, பொருளாதார மற்றும் மனிதாபிமான அவசியம் ஆகிய இரண்டிடையும் அடிப்படையாகக் கொண்டது. இது நெருக்கடி மிகுந்த தருணங்களில் அடிக்கடி புறக்கணிக்கப்படும் அடிப்படை உண்மையை அங்கீகரிக்கிறது: கடனை மீளச் செலுத்த ஆரம்பிக்கும் முன்னர் மீட்சி வர வேண்டும், அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களுக்கான யுகத்தில், கடன் நிவாரணம் விதிவிலக்கான சலுகையாக அல்ல, பேரிடர் பதிலின் இன்றியமையாத பகுதியாகவும் நீண்டகால நிலைத்தன்மைக்கான பாதையாகவும் அது வழி நடத்தப்பட வேண்டும்.

இந்த வாய்ப்பை கடனாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஒருங்கிணைந்தஉயர்மட்ட ஈடுபாடு என்பனவற்றின் மூலம் செயலூக்கமாக பயன்படுத்த வேண்டும், மீட்சியை ஆதரிக்கவும் மீள்செலுத்தல் திறனை பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும்.

உள்நாட்டு பொறுப்பை இராஜதந்திரத்துடன் இணைப்பதன் மூலம், நிலைத்த தன்மையை மீண்டும் கட்டமைக்க, நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வாய்ப்பாக மாற்ற முடியும்.