மலையக மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் நேசக்கரம் நீட்டும் இந்தியா

12.25

இ லங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். சுப்ரமணியம் ஜெய்சங்கரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மனோகணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.

சந்திப்பின் போது, இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தின்போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, தித்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள், குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் டொக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விசேட சந்திப்பின் போது, இந்தியாவின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நான்கு முன்னுரிமை அம்சங்களை உள்ளடக்கிய ஆவணமும் டொக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியா – இலங்கை கொள்கை மற்றும் சிந்தனை வழித்தடத்தை நிறுவனமயமாக்குதல், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்துக்கான நடைமுறை பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள், மலையகப் பகுதிகளுக்கான வெள்ளம் மற்றும் காலநிலை அனர்த்த முகாமைத்துவ உட்கட்டமைப்புகள் மூலம் அனர்த்த மீள்தன்மை, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட இளைஞர் ஈடுபாட்டுத் திட்டங்கள் போன்ற முன்னுரிமை அம்சங்கள் அவற்றில் அடங்குகின்றன.

இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்துக்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மலையக மக்களின் நலனுக்கான நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை தற்காலிக வீடுகளை வழங்குதல், தற்போதைய வசிப்பிடத்திலிருந்து வேறு இடத்துக்குச் செல்லும் போது ஏற்படும் தொழில் மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை தவிர்க்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குதல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது அறிவிக்கப்பட்ட ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தைப் போன்று, LIC Lanka நிறுவனத்தின் ஊடாக பெருந்தோட்ட சமூகத்திற்கான மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தி, அந்த சமூகத்தை இதில் இணைப்பது மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா அளவிலான மருத்துவ காப்புறுதி வழங்குவது,

பெருந்தோட்ட சமூகத்தினர் OCI அட்டையைப் பெறுவதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால், பிறப்புச் சான்றிதழில் இந்திய வம்சாவளித் தமிழர் எனப் பதிவு செய்யப்படுதல் அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்த ஆதாரங்களை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பு, மலையக மக்களின் உடனடி தேவைகள், இடப்பெயர்வுகள், வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒரு முக்கியமான உயர்மட்ட உரையாடல் எனக் கருதப்படுகிறது. இந்தியாவின் உடனடி ஆதரவும், இத்தகைய ஒத்துழைப்பு முயற்சிகளும் மலையக சமூகத்துக்கு நம்பிக்கை மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன.