ஸ்பெயில் முதல் இடத்தில் நீடிப்பு
சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் இந்த ஆண்டில் இறுதியாக புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி 194 ஆவது இடத்தில் நீடிப்பதோடு ஸ்பெயின் அணி முதல் இடத்துடன் 2025 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (23) புதுப்பிக்கப்பட்ட பிஃபா தரவரியில் முதல் 33 இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஸ்பெயின் அணி 1877.18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஆர்ஜன்டீனா (1873.33), பிரான்ஸ் (1870), இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்த்துக்கல் (1760.38), நெதர்லாந்து (1756.27), பெல்ஜியம் (1730.71), ஜெர்மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10ஆவது இடங்களில் உள்ளன.
அதிக ஏற்றம் கண்ட அணியாக வியட்நாம் 3 இடங்கள் முன்னேறி 107 ஆவது இடத்தைப் பிடித்ததோடு அதிக சரிவை சந்தித்த மலேசியா 5 இடங்கள் பின்தங்கி 121 ஆவது இடத்திற்கு இறங்கியது. கட்டாரில் அண்மையில் நடைபெற்ற பிஃபா அரபு கிண்ண தொடரின் காலிறுதி வரை முன்னேறிய பலஸ்தீன அணி புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாக இருப்பதோடு அந்த அணி ஒரு இடம் முன்னேறி 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடைசியாக கடந்த நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட பிஃபா தரவரிசையில் இலங்கை அணி ஓர் இடம் சரிந்து 194 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில் 857.4 தரநிலை புள்ளிகளுடன் இலங்கை அணி அதே தரநிலையை தக்கவைத்துள்ளது. பிஃபா தரவரிசை மீண்டும் 2026 ஜனவரி 19 ஆம் திகதி புதுப்பிக்கப்படவுள்ளது.


