2ஆவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி சொலிட்டை வீழ்த்தியது பெலிகன்ஸ்

decb23

சௌன்டர்ஸ் – நீர்கொழும்பு யூத் போட்டி சமநிலை

இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் நடத்தப்படும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில் அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதோடு சௌன்டர்ஸ் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகளுக்கு இடையிலான போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.

கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான கடைசி இரு ஆட்டங்களாகவே நேற்று முன்தினம் (21) இந்த இரு போட்டிகளும் நடைபெற்றன.

இதில் பி குழுவுக்காக நடைபெற்ற பெலிகன்ஸ் மற்றும் சொலிட் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பத்தில் பரபரப்பாக இடபெற்றதோடு இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சொலிட் அணித் தலைவர் எஸ். ஞானரூபன் 12 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தியபோதும் 2 நிமிடங்களுக்குள் குமார கவினாஷ் மூலம் பெலிகன்ஸ் பதில் கோல் திருப்பியது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1–1 என சமநிலை பெற்றது.

எனினும் இரண்டாவது பாதியில் முழு ஆதிக்கம் செலுத்திய பெலிகன்ஸ் அணி மூன்று கோல்களைப் புகுத்தியது. ஏர்னஸ்ட் அட்டோ 76 மற்றும் மேலதிக நேரத்தில் இரட்டை கோல் புகுத்தியதோடு செல்வம் சுதர்ஷன் 82 ஆவது நிமிடத்தில் கோல் பெற்றார்.

மறுபுறம் சௌன்டர்ஸ் மற்றும் நீர்கொழும்பு யூத் அணி, போட்டி நிறைவு வரை சரிக்கு சமமாக மோதிக் கொண்டதோடு முதல் பாதி ஆட்டம் முடியும்போது 1–1 என சமநிலை பெற்ற நிலையில் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றன. சிவப்பு அட்டை பெற்ற சௌன்டர்ஸ் வீரர் முஹமது பௌஸான் இரண்டாவது பாதியில் வைத்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதினான்கு அணிகள் பங்கேற்றிருக்கும் சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது வாரம் முடியும்போது ஏ குழுவில் நியூ ஸ்டார் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் செரண்டிப் அணியும் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பி குழுவில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய நிலையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.