இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்தானியருக்கு அழைப்பு

dec 18 2

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு ஜோர்தானிய முதலீட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் டொலராக அதிகரிக்கும் யோசனையையும் முன்மொழிந்துள்ளார்.

ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பின் பேரில் அம்மானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்தானின் தலைநகர் அம்மானை சென்றடைந்த பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து இரு தரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்தோடு மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் பிரதமர் மோடியும் அம்மானில் நடந்த ஜோர்தான்-இந்திய வணிக மன்றத்திலும் உரையாற்றியுள்ளனர். அச்சமயம் வணிக உறவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டாம் அப்துல்லா உரையாற்றும் ​போது, ஜோர்தானின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் இந்தியாவின் பொருளாதார வலிமையையும் இணைத்து தெற்காசியாவையும் மேற்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்றுள்ளார்.

பிரதமர் மோடி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா. ஜோர்தான் மற்றும் பிற உலகளாவிய பங்காளர்களுக்கு வணிக வாய்ப்புகளை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்