அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பொன்டி கடற்கரையில் இடம்பெற்ற யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர்கள் தந்தையும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தந்தையும் மகனும் மீன்பிடிக்கச் செல்வதாக குடும்ப உறுப்பினர்களிடம் கூறிவிட்டுச் சென்றே இத்தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஹனுக்கா கொண்டாடத்தின் நிமித்தம் கூடியிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 29 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு துப்பாக்கி தாரிகளில் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதோடு தனயன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நவீட் அக்ரமை சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய உளவுத்துறை ஐ.எஸ். வுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை முன்னெடுத்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸின் பொலிஸ் ஆணையாளர் மால் லான்யோன் நேற்று செய்தியாளர் மத்தியில் உரையாற்றும் போது, சஜித் அக்ரமிடம் துப்பாக்கி லைசன்ஸ் இருந்தது. அவர் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை வைத்திருந்தார். வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் நீண்ட துப்பாக்கிகள் உட்பட ஆறு துப்பாக்கிகள் அவரிடமிருந்தன, அவை சம்பவ இடத்திலும் விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை செய்யப்பட்ட அவரது வீட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன என்றுள்ளார்.
இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ், நியூ சவுத் வேல்ஸில் துப்பாக்கி சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்’ என்றுள்ளார்.
பி.பி.சி
மீன்பிடிக்கச் செல்வதாக கூறிச்சென்று தாக்குதல்


