நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாணவர்கள் சீருடைகளையோ கற்றல் உபகரணங்களையோ இழந்திருந்தால் அதனைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு கற்றலுக்குத் தேவையான சூழலை ஏற்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
நுவரெலியா மாவட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கான கூட்டம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியாத சூழ்நிலை காணப்பட்டால் அம்மாணவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்றலுக்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துதல் வேண்டும்.
இந்த இயற்கை அனத்தத்தினால் நுவரெலியா மாவட்டம் பாரிய அளவில் பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அனைவரினதும் ஒத்துழைப்பு காரணமாக இன்று நாம் வழமை நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருக்கிறோம். ஆனால் கட்டியெழுப்ப வேண்டிய நிறைய விடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. நாம் இன, மத,மொழி,கட்சி பேதங்களை மறந்து எவ்வாறு செயற்பட்டோமோ அதே போன்று தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டால் இப்பேரிடரை வெற்றி கொள்வது பெரிய காரியமல்ல. இதற்கு உங்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
நுவரெலியா என்பது எமது நாட்டின் இயற்கையின் கொடையில் அமையப்பெற்ற ஒரு அழகான நகரம். அதனை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான ஒத்துழைப்பினை எங்கள் அரசியல் பிரமுகர்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். இதனைக் கட்டியெழுப்புவதற்கு சரியான தரவுகள், தகவல்கள் மிகவும் முக்கியமானது. அதனை நீங்கள் தான் சரியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2026 கல்வி ஆண்டு எமக்கு மிகவும் சவால் மிக்கது. அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நாம் நாடு என்ற ரீதியில் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இந்த அனர்த்தத்தின் போது சிரமங்களை பாராது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் இந்த வேளையில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர,கிட்ணன் கலைச்செல்வி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், செயலாளர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


