25,000 மெற்றிக் தொன் உப்பு சேதமடைந்ததால் ரூ. 120 கோடி இழப்பு

111

புத்தளம் உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு, அண்மையில் ஏற்பட்டிருந்த இயற்கை சீற்றத்தால் சேதமடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனிஸ் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

”புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சொந்தமான உப்பளங்களில் மாத்திரம் பத்தாயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு, நீர் புகுந்ததால் நாசமாகியுள்ளன. புத்தளம், வனாத்தவில்லுவ, முந்தலம் மற்றும் கற்பிட்டி பகுதிகளில் உள்ள தனியார் உப்பு உற்பத்தியாளர்களின் அறுவடையிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும்,சேமித்து வைக்கப்பட்ட 5,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பும் நாசமாகியுள்ளது.

இதனால்,சுமார் ரூ. 120 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு அதிக பணம் செலவாகும்.  எனவே, அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.