கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம்மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர தெரிவித்தார்.
அடை மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் ஆளுநர் நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவைகளை வழங்குவதுடன், இதற்காக ஆளுநர் அலுவலகம் எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாடசாலைகளை மீளத் திறக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல், சுகாதார சேவையை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்தல், கழிவு முகாமைத்துவம் செய்தல், பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள் மற்றும் பண்ணைகள், விவசாய நிலங்களை மதிப்பீடு செய்து உரியவர்களுக்கு உதவுதல், நீர்ப்பாசனப் பாதிப்புகளை மீள் கட்டுமானம் செய்தல், மீன்பிடித் தொழிலாளர்களின் பாதிப்புக்களை மதிப்பீடு செய்து தொழிலை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அண்மையில் பெய்த அடை மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தத் தருணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முதன்மைப் பணியாகுமெனவும் இந்தப் பணியில் இன, மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுகின்றமை பாராட்டுக்குரியதெனவும் கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.


