படிப்படியாக நிலை பெறும் வடகீழ் பருவமழை

6

– இன்று வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பல முறை மழை

– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் மழை

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (06) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.