காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு தெற்கு காசாவில் இடம்பெற்ற புதிய தாக்குதல் ஒன்றில் இரு சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் நகரின் மேற்காக அல் மவாசி பகுதியில் ‘இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றின் காரணமாக இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயடைந்துள்ளார்’ என்று சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் கடந்த புதன்கிழமை (03) இரவு ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டுள்ளது.
கான் யூனிசில் குவைட்டி வைத்தியசாலைக்கு அருகே ஏவுகணை விழுந்திருப்பதோடு இதில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்ற கூடாரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எட்டு மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் மேற்படி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் ‘ஹமாஸ் பயங்கராவாதிகள்’ மீதே தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் பின்னர் குறிப்பிட்டிருந்தது. அந்தப் பகுதியில் பலஸ்தீன போராளிகளுடன் ஏற்பட்ட மோதலில் ஐந்து படையினர் காயமடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது. போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து அங்குள்ள கட்டடங்களை இடித்து வருதோடு தினசரி வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி வரும் நிலையிலேயே இந்த புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி எட்டப்பட்ட பலவீனமான இந்த போர் நிறுத்தம் காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களை நிறுத்தியபோதும் முறியும் அபாயத்துடனேயே நீடித்து வருகிறது.
கிழக்கு ரபாவில் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சுரங்கப்பாதைகள் ஊடாக வந்த போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
‘இந்த மோதலின்போது (இஸ்ரேலிய) போர் வீரர்கள் பலரும் படுகாயத்திற்கு உள்ளானதோடு மேலும் இரு போர் வீரர்கள் மற்றும் அதிகாரி ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகினர்’ என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டது. இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில் வான் தாக்குதல் பற்றி குறிப்பிட்டபோதும் அதன்போது இடம்பெற்ற மோதல் தொடர்பில் எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.
காசா பாதுகாப்பு தரப்பு ஒன்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘போர் விமானங்களில் இருந்து கடுமையான துப்பாக்கிச் சூட்டுடன் ரபா நகரின் கிழக்கே ஆக்கிரமிப்பு வாகனங்களில் இருந்து கடுமையான செல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இஸ்ரேலிய ஹெலிகளும் அங்கு தரையிறங்கி உள்ளன. ரபாவுக்கு அருகே உள்ள சுரங்கங்களில் நடத்திய இராணுவ நடவடிக்கையில் 40 இற்கும் அதிகமான போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. காசாவில் இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் கணிசமான ஹமாஸ் போராளிகள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 60 தொடக்கம் 80 போராளிகள் சுரங்கங்களில் சிக்கி இருப்பதாக முன்னணி ஹமாஸ் உறுப்பினர் ஒருவர் ஏ.எப்.பி. இற்கு நேற்று குறிப்பிட்டிருந்தார்.


