ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 தொடரில் டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்புச் சம்பியனாக இருக்கும் டுபாய் கெபிடல்ஸ் கடந்த முறை கிண்ணத்தை வெல்வதில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த தசுன் ஷானக்க துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சோபித்திருந்தார். ஒரு போட்டியில் அவர் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய தலைமையின் கீழ் புதிய பாதையில் அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் வெற்றிப் பாதையை உறுதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டுபாய் கெபிடல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
‘டுபாய் கெபிடல்ஸ் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய கௌரவமாகும். இந்த அணி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இந்தப் பொறுப்பை ஏற்க நான் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் சமநிலையான, ஆர்வமுள்ள அணி ஒன்று உள்ளது, மேலும் இந்த பருவத்தில் நாங்கள் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடி எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க சுகவீனம் காரணமாக வெளியேறிய நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண டி20 தொடருக்கும் தசுன் ஷானக்கவே இலங்கை அணித் தலைவராக செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தசுன் ஷானக்க அமைதியான பண்பு, நோக்கம் மற்றும் விளையாட்டைப் பற்றி நன்கு புரிதலை பெற்றவராவார். அவர் அணியை முன்மாதிரியாக வழிநடத்துகிறார். மேலும் அவரைச் சுற்றி வீரர்கள் ஒன்று திரள்கின்றனர். நாம் உருவாக்கிய அணி மற்றும் கட்டியெழுப்பி இருக்கும் மனநிலையுடன் வலுவான தொடர் ஒன்றை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்’ என்று டுபாய் கெபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச லீக் டி20 தொடர் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு முதல் போட்டியில் டுபாய் கெபிடல்ஸ் அணி டெசேர்ட் வைப்பஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 04 ஆம் திகதி நடைபெறும்.


