இலங்கை இளையோருக்கு எதிராக பங்களாதேஷ் அணி கோல் மழை

nov27

சீனாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக நேற்று (26) நடைபெற்ற ஆட்டத்தில் 0–5 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை இளையோர்கள் இளையோர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது.

17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் சுற்றின் ஏ குழுவில் ஆடும் இலங்கை இளையோர்கள் நேற்றைய தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் புரூணை அணியை 4–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோதும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது மாத்திரமன்றி அந்த இரண்டு போட்டிகளிலும் மொத்தமாக ஏழு கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
பங்களாதேஷ் இளையோருக்கு எதிராக முதல் பாதியின் 24 மற்றும் 29 ஆவது நிமிடங்களில் கோல்களை விட்டுக் கொடுத்ததால் முதல் பாதி முடிவில் 0–2 என பின்தங்கியது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. அந்த அணி 64, 90 ஆவது நிமிடங்களிலும் மேலதிக நேரத்திலும் மேலும் மூன்று கோல்களை புகுத்தியது.
இதனால் புள்ளிப்பட்டியில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கும் பங்களாதேஷ் 17 வயதுக்கு உட்பட்ட அணி ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.