உலகிலேயே மிகப் பெரிய கடற்கரை வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. சுமார் 50 கோடி மக்கள் இக்கடலோரப் பகுதியில் வசிக்கின்றனர். உலக வரலாற்றில் மிகத் தீவிர புயல்களை எதிர்கொள்வதும் இக்கடற்கரைப் பகுதிதான்.
வானிலை விவரங்களை வழங்கும் ‘வெதர் அண்டர் கிரவுண்ட்’ (Weather Underground) என்ற இணையதளத்தில் இக்கடற்கரை தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணையதளத்தின்படி, உலக வரலாற்றின் மிகக் கொடிய 35 புயல்களில் 27 பெரும் புயல்கள் இக்கடற்கரைப் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளன.
அந்த வகையில் தற்போது வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்குப் பகுதியில் உருவெடுத்துள்ள மோன்தா புயல், அங்கிருந்து மேற்கு-வடமேற்காக மணிக்கு 18 கிலோமீற்றர் வேகத்தில் நகர ஆரம்பித்தது. அது நேற்று (அக்டோபர் 27) காலை 8.30 மணியளவில் தமிழ்நாட்டின் சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 520 கிலோமீற்றர் தொலைவில் இலங்கைக்கு அப்பால் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் மேற்கு- வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது என்றுள்ள இந்திய வானிலை நிலையம், மேற்கு- வடமேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெற்று இன்று (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக மாற முடியும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை அல்லது இரவு ஆந்திராவில் மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். அது மணிக்கு 110 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்புயலின் தாக்கங்கள், பாதிப்புக்களை குறைத்து தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் தென்னிந்திய மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.என்றாலும் இப்புயல் மாத்திரமல்லாமல் தீவிர புயல்கள் அனைத்தும் வங்காள விரிகுடாவில்தான் ஏற்படுகின்றன என்று வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இங்கு கடல் ஆழம் குறைவாக இருப்பதுடன், கடற்கரைப் பகுதி ஒருபுறம் சாய்ந்தும், பள்ளமாகவும் அமைந்துள்ளமையும் அதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக புயல் வீசும் பலத்த காற்று, கடல் நீரை வலுவாகக் கரை நோக்கித் தள்ளும். இதன் விளைவாக, அலையின் வேகம் திடீரென அதிகரித்து, புயல் நேரடியாகக் கரையைத் தாக்கும். இந்த வகையான புவியியல் சூழ்நிலைகளுக்கு வங்காள விரிகுடா ஒரு தெளிவான உதாரணம் என்று ‘வெதர் அண்டர் கிரவுண்ட்’ கட்டுரையாளரும், புகழ்பெற்ற வானிலை ஆய்வாளருமான பாப் ஹென்சன் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்கள் பெரும்பாலும் வடக்குக் கடலோரப் பகுதியில் திடீரெனத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. பூமியில் வேறு எங்கும் இவ்வளவு மோசமான தாக்கங்கள் ஏற்படுவதில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் வங்காள விரிகுடாவின் மேற்பரப்பில் வெப்பநிலை எப்போதும் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணம். இதுவும் தீவிரப் புயல்கள் ஏற்பட வழிவகுக்கின்றன என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவர் டி. மகாபாத்ரா குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய இதுபோன்ற பெரும் புயல்கள் ஏற்படும் மேலும் சில கடலோரப் பகுதிகளும் உள்ளன. அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள வளைகுடா கடலோரப் பகுதி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வங்காள விரிகுடாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதும் புயல்களால் அதிக சேதம் ஏற்படக் காரணமாக அமைகிறது. மேலும், உலகளாவிய ரீதியில் நான்கு பேரில் ஒருவர் கடலோரப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். பெரும் புயல்களால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. பலத்த காற்றினாலும் சேதங்கள் அதிகமாக இருக்கும். கடலில் அலைகளும் தீவிரமாக இருக்கும். இந்த இரண்டோடு, கடும் மழையும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.
பொதுவாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் அடிக்கடி புயல்கள் உருவானாலும், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பது ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், 1970 நவம்பரில் ஏற்பட்ட ‘போலா’ (Bhola) சூறாவளி, உலக வரலாற்றிலேயே மிகக் கொடிய புயல்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட இப்புயலால் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இப்புயலின்போது கடலோரப் பகுதியில் அலைகள் சுமார் 34 அடி உயரத்திற்கு எழும்பியதாகப் பதிவுகள் உள்ளன.
அதேநேரம் 1978 இல் இலங்கையின் கிழக்கு பகுதியைப் பெரிதும் தாக்கிய சூறாவளியும் வங்காள விரிகுடாவில் உருவான ஒன்றேயாகும். அந்த சூறாவளியினால் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதோடு ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியளவில் சேதமடைந்ததோடு, 240 பாடசாலைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகின. 600 மில்லியன் ரூபாவுக்கும் மேல் இலங்கை நஷ்டத்திற்கு உள்ளானதாக மதிப்பிடப்பட்டது. இந்தப் பின்னணியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்ரித், கடந்த சில தசாப்தங்களாக வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் பர்மா கடற்கரையில் ஏற்பட்ட ‘நர்கிஸ்’ (Nargis) புயலால் சுமார் 1,40,000 பேர் உயிரிழந்தனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
“இப்புயலினால் ஏற்பட்ட அழிவை ஒரு பத்திரிகையாளர், ‘மை கொண்டு வரையப்பட்ட வண்ண ஓவியத்தின் மீது திடீரென ஒரு வாளி தண்ணீரைக் கொட்டியது போல் இருந்தது. மிகவும் கவனமாக வரையப்பட்ட கோடுகள் அனைத்தும் (டெல்டா கால்வாய்கள்) முற்றிலும் அழிக்கப்பட்டன. கீழே இருந்த காகிதம் முழுவதும் கிழிந்து போனது போல் இருந்தது,” என்று விவரித்திருந்தார்.
1999-இல் உருவான ‘சூப்பர் சைக்ளோன்’ இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கியது. அந்தப் புயலின் தாக்கத்தால் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். எங்கு பார்த்தாலும் அழுகிய சடலங்கள், அந்தளவுக்கு அப்புயலின் தாக்கங்கள் காணப்பட்டன. ஒரு புயலின் தாக்கத்தால் நிலைமைகள் எவ்வளவு மோசமாக மாறும் என்பதற்கு அப்புயல் ஏற்படுத்திய அழிவுகளும் சேதங்களும் நல்ல எடுத்துக்காட்டு.


