பிஃபா உலகக் கிண்ணம்: கானா அணி முன்னேற்றம்

ஆபிரிக்க பிராந்தியத்திற்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கொமொரோஸ் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கானா அணி 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கானாவில் நேற்று முன்தினம் ஐ குழுவுக்காக நடைபெற்ற இந்தத் தகுதிகாண் போட்டியில் டொட்டன் ஹொட்ஸ்பூர் அணியின் மத்திய கள வீரர் முஹமது குதுஸ் 47 நிமிடத்தில் பெற்ற கோல் கானா அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இந்த வெற்றியுடன் தனது குழுவில் முதல் இடத்தை உறுதி செய்ததை அடுத்தே கானா உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றது. இதன்மூலம் ஆபிரிக்க பிராந்தியத்தில் ஐந்தாவது அணியாகவே ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு கானா தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே அல்ஜீரியா, எகிப்து, மொரோக்கோ மற்றும் துனீஷிய அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.  எனினும் கானா அணி இதற்கு முன்னர் நான்கு முறை உலகக் கிண்ணத்தில் ஆடி இருப்பதோடு அதில் 2010 ஆம் ஆண்டு அந்த அணி காலிறுதி வரை முன்னேறியதே உச்ச திறமையாகும்.