– இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் மேலும் 61 பேர் பலி
பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியாவை அடுத்து பிரான்ஸ் உட்பட மேலும் பல நாடுகளும் பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரித்தபோதும் காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் தொடர்வதோடு, காசா நகர் தரைமட்டமாக்கப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
ஐ.நா. பொதுக் குழு கூட்டத்தையொட்டி முன்னெடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலின் தாக்குதல்களை தணிக்காத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 61 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 220 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று (22) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்று காலை இடம்பெற்ற தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் குறைந்தது 22 பேர் காசா நகரைச் சேர்ந்தவர்கள் என்று மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
காசா நகர மையப்பகுதியை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வரும் நிலையில் அங்குள்ள கட்டடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரு நாட்டு தீர்வுக்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தலைமையில் நியூயோர்க்கில் நேற்று (22) இடம்பெற்ற மாநாட்டில் மேலும் பல நாடுகளும் பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரித்துள்ளன. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகள் பலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நிலையில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் இஸ்ரேலுக்கு நெருங்கமான ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பேர்க், அன்டோரா, சான் மரினொ மற்றும் மோல்டா நாடுகள் பலஸ்தீனத்தை ஏற்றுள்ளன.
ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் பலஸ்தீனத்தை ஏற்கனவே அங்கீகரித்திருப்பதோடு அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜெர்மனி உட்பட சொற்பமான நாடுகளே பலஸ்தீன தனி நாட்டை இன்னும் அங்கீகாரிக்காமல் உள்ளன. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன், அது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முடிவுகள் களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இஸ்ரேலிய வரலாற்றில் தோன்றி இருக்கும் தீவிர வலதுசாரி அரசு காசாவில் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதோடு ‘பலஸ்தீன நாடு என்று ஒன்று இல்லை’ என்று அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட 1993 ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையாக இருநாட்டு தீர்வுத் திட்டம் அமைந்திருந்தபோதும் அது தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து அந்தத் திட்டம் செயலிழக்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நேற்று நடந்த மாநாட்டை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க புறக்கணித்தோடு, இந்த மாநாட்டை ஒரு ‘சர்க்கஸ்’ நிகழ்வு என்று இஸ்ரேலின ஐ.நா தூதுவர் டனி டனொன் குறிப்பிட்டிருந்தார். ஜோர்தான் நதிக்கு மேற்காக எந்த பலஸ்தீன நாடும் இல்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
பிரதான ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தபோதும் ஜெர்மனி மற்றும் இத்தாலி அந்த முடிவை இன்னும் எடுக்கவில்லை. யூதப் படுகொலையுடன் வரலாற்று ரீதியில் தொடர்புபட்டிருக்கும் ஜெர்மனி இஸ்ரேலுடன் நெருங்கமான உறவை கொண்டுள்ளது. இஸ்ரேலின் கொள்கைகள் தொடர்பில் அந்த நாட்டின் விமர்சனங்கள் வலுத்து வருகின்றபோதும் பலஸ்தீன நாடு அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மனி கூறி வருகிறது. பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இத்தாலி குறிப்பிட்டுள்ளது. எனினும் இத்தாலியின் சுமார் 80 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நேற்று இடம்பெற்றன.
இதேவேளை, இதற்கு பதில் நடவடிக்கையாகவும் குறிப்பாக பிரான்ஸுக்கு எதிரான இது தரப்பு நடவடிக்கையாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியை இஸ்ரேலிய ஆட்புலத்திற்கு இணைப்பது குறித்து இஸ்ரேல் ஆலோசித்து வருதாக அதன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பிரிட்டன் உட்பட பல நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளை நெருங்கி இருக்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 65,344 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 166,795 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காசா நகரை கைப்பற்றும் தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்து அங்கு குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேல் அந்த நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என கூறி வருகிறது.


