பங்களாதேஷை இலகுவாக வென்ற இலங்கை இன்று ஹொங்கொங் அணியுடன் பலப்பரீட்சை

sept15

பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கிண்ணத் தொடரில் முதல் போட்டியில் ஆறு விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி தீர்க்கமான ‘நெட் ரன் ரேட்டை’ அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆசிய கிண்ண தொடரில் பி குழுவில் இடம்பெற்றிருக்கு இலங்கை அணி நேற்று முன்தினம் (13) அபூதாபியில் தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களை ஓட்டம் இன்றியே வெளியேற்றுவதற்கு முடிந்தது.

மத்திய வரிசை வீரர்களும் முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது உபாதையில் இருந்து மீண்டு; அணிக்குத் திரும்பிய வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலெடுத்தாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் விக்கெட்டை 3 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும் மீண்டும் ஒருமுறை சோபித்த பத்தும் நிசங்க 34 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசிய நிலையில் டி20 சர்வதேச போட்டிகளில் வேகமாக 2000 ஓட்டங்களை எட்டிய இலங்கை வீரராக பதிவானார். பத்தும் நிசங்க ஆடிய 69 ஆவது டி20 போட்டி இதுவாகும்.

மறுபுறம் தனது 6ஆவது டி20 போட்டியில் களமிறங்கிய கமில் மிஷார அதிரடியாக துடுப்பெடுத்தாடியதோடு 32 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காத 46 ஓட்டங்களை விளாசினார். வேகமான துடுப்பாட்டத்தின் மூலம் 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்ட இலங்கை அணியால் முடிந்தது.

இதன்மூலம் இலங்கை அணி பி குழுவில் 2 புள்ளிகளைப் பெற்ற நிலையில் 2.59 என ரன் ரேட்டையும் அதிகரித்துக் கொண்டது. எனினும் ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் ஆப்கான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அது 4.70 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றான சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் ஆரம்ப சுற்றில் ரன் ரேட் தீர்க்கமானதாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி இன்று ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும். டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் இலங்கை அணி பெரிதாக மாற்றங்கள் செய்யாது களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

இணை அங்கத்துவ நாடாக தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்று ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெற்ற ஹொங்கொங் அணியிடம் இருந்து இலங்கைக்கு பெரிதாக சவால் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். டி20 போட்டி ஒன்றில் இலங்கை அணி ஹொங்கொங்கை எதிர்கொள்வது இது முதல் முறையாக உள்ளது.