அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.
வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தௌிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு. தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா?அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில்,அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?
எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது,அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி?
இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது. முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில்,சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான்.ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதா கக்கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.
இது குறித்து
இந்தியாவுக்குத் தௌிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளதுதான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே,இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால்,அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More