காணாமலாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் : ஜேவிபி ஆளும் கட்சியாக இருப்பதை விட எதிர்க்கட்சியாக செயற்படுவதே நாட்டுக்கு நல்லது – ஐக்கிய காங்கிரஸ்.
நூருல் ஹுதா உமர்
சரணடைந்த, அல்லது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் காணாமல் போனோர் அலுவலகம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் நேர்மையாக செயல்படவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளது. இது சம்பந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த பல முஸ்லிம்கள் 1983 முதல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை என்று அக்கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 1990 களில் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசா, விடுதலைப்புலிகள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் தேனிலவு கொண்டாடிய காலத்தில் பலநூற்றுக்கனக்கான முஸ்லிம் இளைஞர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர். அதே போல் பல இளைஞர்கள் சரணடையாவிட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வோம் என புலிகள் சொன்னதால் கல்முனை, மட்டக்களப்பு போன்ற ஊர்களில் இருந்த விடுதலைப்புலிகளின் முகாம்களில் முஸ்லிம் இளைஞர்கள் சரணடைந்தனர். தமது மகன்மாருக்காக அவர்களின் தந்தை, சகோதரர்களும் பிணையாக சரணடைந்தனர். இவர்களில் எனது சகோதரர் அக்றம் ரிழாவும் ஒருவர். அவரை புலிகள் எமது வீட்டுக்கு வந்து கைது செய்தனர். ஆகவே இவை பற்றிய பூரண அறிவு எனக்கு உண்டு. இவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
அதே போல் 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற 125 முஸ்லிம்கள் களுவாஞ்சிக்குடியை தாண்டியதும் குருக்கள் மடம் என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டனர். இவர்களில் எனது தந்தை அப்துல் மஜீத் மௌலவியும் ஒருவர். இவர்களுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை என்பதுடன் யுத்தம் முடிந்த பின்னரும் இவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்படவில்லை. நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் கணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் கல்முனையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது நானும் கலந்து கொண்டு முறையிட்டிருந்தேன். குறைந்தது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்திற்கு பாதுகாப்புடன் சென்று அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கும் மனிதாபிமான வசதிகளையாவது செய்து தரும்படி விசாரணைக்குழுவிடம் கேட்டிருந்தேன். ஆனாலும் எதுவித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை.
ஆகவே இது விடயத்தில் மேற்படி அலுவலகமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் தலையிட்டு கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என தனியான அலுவலகம் திறக்கப்பட்டு எமக்கான நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ஜேவிபியிடம் ஆட்சியை வழங்கினால் முதலில் அவர்கள் செய்யும் செயல் முஸ்லிம் திருமண சட்டத்தையும் முஸ்லிம் பாடசாலைகளையும் ஒழிப்பதுதான். கடந்த கால ஜேவிபியின் அறிக்கைகள் இதை காட்டுகின்றன. நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும். இனவாதம் ஒழிய வேண்டும், ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் ஒன்று பட வேண்டும் என ஜேவிபியினர் கூறுகின்றனர். இதைத்தான் மஹிந்தவும் சொன்னார், மைத்திரியும் சொன்னார். ரணிலும் சொன்னார், சஜித்தும் சொன்னார். ஊழல் ஒழியவில்லை, ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. ஜேவிபியினர் இன்னமும் சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலில் உள்ளனர்.
நாம் ஜேவிபியிடம் கேட்கிறோம். இந்த நாட்டை சீரழித்தது ஊழல் அரசியல்வாதிகளை விட சிங்கள, பௌத்த பேரினவாதமும் ஏனைய இனங்களை ஒதுக்கியதுமாகும் என்பதை முதலில் ஏற்பீர்களா? முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் தீகவாபியில் பறிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக்காணி வழங்க முற்பட்ட போது அதற்கெதிராக ஜேவிபி அம்பாரையில் ஆர்ப்பாட்டம் செய்து காணி வழங்களை தடை செய்தது. அதற்காக இன்று வரை ஜேவிபி முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டதா? முஸ்லிம்களின் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும், பாடசாலைகளில் ஒழிக்க வேண்டும் என்ற ஜேவிபியின் கொள்கைகளில் இருந்து அக்கட்சி மீண்டுள்ளதா?
இலங்கை ஆட்சியாளர்களின் இனவாத செயல்பாடு காரணமாகவே நாடு தனது நற்பெயரை இழந்து இன்று சர்வதேசத்தின் உதவியை இழந்து பரிதவிக்கிறது. இனவாத்ததை கொள்கையாக கொண்ட ஜேவிபி ஆட்சிக்கு வருமானால் இதைவிட நாட்டுக்கு கெட்ட பெயர் வருமே தவிர பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளின் கோபத்துக்கு நமது நாடு முகம் கொடுக்கும்.இடது சாரி கொள்கை என்பது பணக்காரனை பிடித்து அவன் பணத்தை பறித்து அவனை ஏழையுடன் இணைத்து விட்டு இருவரும் சமம் என்ற பொதுவுடமை கொள்கை கொண்டதாகும்.
ஆகவே ஜேவிபியினர் தமது கம்யூனிச கொள்கைகளை விட்டு விட்டு நமது நாட்டுக்கு ஏற்ற உண்மையான, நேர்மையான அரசியல் கொள்கைகளுக்கு வகுத்து, எந்த மதத்துக்கும் இனத்துக்கும் முன்னுரிமை என்றில்லாது சகல மதங்களும் இனங்களும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என அறிவிப்பார்களா? ஜேவிபி ஆளும் கட்சியாக இருப்பதை விட எதிர்க்கட்சியாக செயற்படுவதே நாட்டுக்கு நல்லது என்றார்
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More