ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; ஊழியர் ஒருவர் 20 அடி உயரமுள்ள மின் விளக்கு டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

இந்தியவின்  கடலூர் வன்னியர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 68). இவர் கடலூர் போக்குவரத்து பணிமனையில் சாரதியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை கடலூர் இம்பிரீயல் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வந்த கலியமூர்த்தி தனக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் மனமுடைந்த கலியமூர்த்தி போக்குவரத்து பணிமனையின் முதல் மாடியில் உள்ள 20 அடி உயரமுள்ள மின் விளக்கு டவரில் ஏறினார். பின்னர் தனக்கு ஓய்வூதியம் வழங்காவிட்டால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

அப்போது அங்கிருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலியமூர்த்தியிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என கூறினார். இதைத் தொடர்ந்து கலியமூர்த்தி மின்விளக்கு டவரில் இருந்து கீழே இறங்கினார்.

அவரிடம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!