கொரோனா தடுப்பு உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
கொரோனா தடுப்பு உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள சூழ்நிலையில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளிடமும், பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும், பிரதமர் நரேந்திரமோடி நேற்று நடந்த காணொலி காட்சியோடு இதுவரை 3 முறை கலந்தாய்வு மேற்கொண்டிருக்கிறார்.
கலந்தாய்வு கூட்டம் 2 மணி நேரம் நீடித்தது. பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் முக கவசம் அணிந்தபடி பங்கேற்றனர்.
இந்த கலந்தாய்வில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
கொரோனா விடுத்திருக்கும் சவாலை எதிர்கொள்ள நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி. தமிழகமும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு பணிக்குழுவும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட 12 குழுக்களும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு மிக கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது.
ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படக் கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதை பிரதமருக்கும் மற்ற மாநில முதல்-மந்திரிகளுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.
பருப்பு, மசாலா வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள், மற்ற மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் எளிதாக கொண்டுவரப்பட வழிவகை செய்ய வேண்டும். அதுபோல மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் இதுபோன்ற சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.
இந்த நீண்டகால ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக் காமல் நெருக்கடி ஏற்பட அனுமதித்துவிடக் கூடாது.
வேளாண்மைக்கு நாம் முழு ஆதரவை அளித்தாக வேண்டும். எனவே வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக ஒரு சிறப்பு தொகுப்பை நீங்கள் அறிவிக்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு நீடித்தால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்களை ஆதரிக்கும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து பொது இடங்களும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. இதுவரை 32 ஆயிரத்து 371 தனிப்படுக்கைகளும், 5,934 அவசர சிகிச்சைப் பிரிவு ஐ.சி.யு. படுக்கைகளும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொற்று தொடர்பான பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக ரேப்பிட் டெஸ்ட் கிட் என்ற துரித பரிசோதனை உபகரணங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்துக்கு 2 லட்சம் உபகரணங்களை அளிப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
21 அரசு மருத்துவமனைகளும், 155 தனியார் மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 12 அரசு சோதனைக்கூடங்களும், 7 தனியார் சோதனைக் கூடங்களும் உள்ளன. மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் இதன் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
அதிக அளவில் பி.சி.ஆர். மற்றும் துரித பரிசோதனை உபகரணங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பி.பி.இ. மற்றும் என் 95 மற்றும் வெண்டிலேட்டர் போதுமான அளவில் தரப்பட வேண்டும். இதற்காக நான் ஏற்கனவே கேட்டுள்ள ரூ.3 ஆயிரம் கோடியை அனுமதிக்க வேண்டும்.
கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகவும், மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் ஒருங்கிணைந்த திட்டத்தை தொடங்குவதற்கு வசதியாக தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை மானியமாக அனுமதிக்க வேண்டும்.
2020-21-ம் ஆண்டுக்கான நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிக்குழுவின் பரிந்துரையில் 50 சதவீத தொகையை இப்போதே வழங்க வேண்டும். வருவாய் பற்றாக்குறை மானியத்தில் 50 சதவீதத் தொகையை உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.510 கோடியை அனுமதித்ததற்கு நன்றி. ஆனால் 15-ம் நிதிக்குழுவின் நடைமுறைப்படி இந்த நிதியில் தமிழகம் 64.65 சதவீத உயர்வை மட்டுமே பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள் 120.33 சதவீத உயர்வை பெற்றுள்ளன.
2016-ம் ஆண்டு வர்தா புயல் மற்றும் கடுமையான வறட்சி, 2017-ம் ஆண்டு ஓகி புயல், 2018-ம் ஆண்டு கஜா புயல் என தொடர்ச்சியாக இயற்கை பேரிடர்களை சந்தித்து வரும் தமிழகத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைவான ஒதுக்கீடே அனுமதிக்கப்படுகிறது.
மருத்துவ மற்றும் தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தமிழகத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை தற்காலிக மானியமாக உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!