சீனாவில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொரோனா வைரஸ்

சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடர, அரசு முடிவு செய்துள்ளது.

அண்டை நாடன சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுதும் வேகமாக பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில், 3,331 பேர், வைரஸ் தாக்குதலுக்கு பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வூஹான் நகரில் பரவிய கொரோனா, மெல்ல மெல்ல, சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, சீன அரசு, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.

சமீபகாலமாக பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, வூஹான், பீஜிங் நகரங்களில் கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த சீனர்கள், விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கணிசமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும், புதிதாக, 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 38 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடரும்படி, அரசுக்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுப்பதால், இதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல், சுகாதாரத் துறை அதிகாரிகள் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!