தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோரின் கடைசி ஆசைகள் !

நிர்பயா வழக்கில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த குற்றவாளிகள் தூக்குமேடைக்கு செல்வதற்கு முன்னர் தெரிவித்த கடைசி ஆசைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், குற்றவாளி முகேஷ் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளரிடம் கடைசியாகத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வினய் குமார் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன், சிறையில் தான் வரைந்த ஓவியங்களில் அனுமன் மந்திரம் தொடர்பான ஓவியத்தை சிறைக் கண்காணிப்பாளருக்கும், மற்றொரு ஓவியத்தைத் தனது குடும்பத்தினருக்கும் வழங்க விரும்புகிறேன் எனக் கடைசியாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற இரு கைதிகளான பவன் குப்தா, அக்சய் குமார் இருவரும் தங்களின் கடைசி ஆசைகளையும், வார்த்தைகளையும் பேசாமலேயே தூக்கு மேடைக்கு ஏறியுள்ளனர்.

கடந்த 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், குறித்த தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்கள், மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நான்காவது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திஹார் சிறையில்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் குற்றவாளிகள் நான்கு பேரின் உடல்களையும் முப்பது நிமிடங்கள் கயிற்றில் தொங்கவிட்டபின் இறக்கப்பட்டன.
இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திஹார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல், “தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு முப்பது நிமிடங்களுக்குப் பின் மருத்துவர் ஆய்வு செய்து, உயிர் பிரிந்து விட்டது என அறிவித்த பின் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றோம். உடற்கூறு ஆய்வு முடிந்த பின் நான்கு பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!