கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 798 ஐ எட்டியுள்ளது

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 798 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 208 ஆல் அதிகரித்துள்ளது.

தேசிய சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரத்தின்படி, இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை மொத்தமாக 32,771 பேர் COVID-19 வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதிக்கப்பட்டுள்ளவர்களில் 97.6% பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகள் இறந்துள்ளனர்.

வேல்ஸில் 13 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்கொட்லாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு அயர்லாந்தில் 20 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வெடிப்புத் தொடங்கியதிலிருந்து இன்று வெளியான எண்ணிக்கை மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

ஒரு வாரத்திற்கு முன்னர் மார்ச் 6 ஆம் திகதி வரை வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 163 ஆக இருந்தது.

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 798 ஆக இருப்பினும் 10,000 பேர் வரை நோய்த் தொற்றைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

வைரஸின் தீவிரம் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளை மறுபரிசீலனை வேண்டுமென டொக்ரர் ஹிலரி ஜோன்ஸ் (Dr Hilary Jones) வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்க அரசாங்கம் இன்னும் உத்தரவிடவில்லை. எனினும் அனைத்துக் கால்பந்துப் போட்டிகளும் ஏப்ரல் 3 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலை மாணவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருமல் அல்லது உடல் வெப்பநிலை உள்ள எவருக்கும் ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்தல் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 118 நாடுகளில் 139,579 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,120 ஐத் தாண்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!