ஐ.பி.எல் தொடருக்கு ஆப்பு வைக்கும் ஐ.சி.சி !

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. 13-வது சீசன் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஆசிய கோப்பை டி20 தொடர், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் போட்டியை நடத்துவது சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆனால் ஐசிசி இதுவரை டி20 உலக கோப்பையை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்காமல் இழுத்தடிக்கிறது. ஐசிசி-யின் தலைவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர்தான் இதற்கு காரணம் என பிசிசிஐ தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த மாதம் மத்தியில்தான் முடிவு எடுக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடர் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் தொடரை நடத்தும் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் தொடருக்காக டி20 தொடரை ஒத்திவைக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆசிய கோப்பையையும் நடத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னதாகவே ஐபிஎல் தொடருக்கு தயாரானால்தான் வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து அவர்களை தனிமைப்படுத்தி தொடருக்கு தயார்படுத்த முடியும். இதற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தேவைப்படும்.
இதனால் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நேரத்தில் ஆசிய கோப்பையை நடத்த பிசிசிஐ அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தியாகம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தயாராக இல்லை.
ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும் முட்டுக்கட்டையாக இருப்பதால் என்ன செய்யலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ-க்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!