“இவரால் தூக்கத்தை தொலைத்து இருக்கிறேன்”

மணிக்கு சீராக 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது வீச்சை எப்படி கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடலில் இணைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆரம்ப காலத்தில் உங்களை மிரட்டிய பவுலர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், ‘‘நான் இந்திய அணிக்குள் நுழைந்தபோது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உலகின் அதிவேக பவுலராக திகழ்ந்தார். 2007-ம் ஆண்டு ஒரு நாள் தொடரின்போது, மணிக்கு சீராக 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது வீச்சை எப்படி கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனது தூக்கத்தையும் தொலைத்து இருக்கிறேன்.
இதேபோல் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் அவரது பந்து வீச்சை ஒருபோதும் சந்திக்கக் கூடாது என்று நினைப்பேன்.
எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியபோது, இவர்கள் இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது.
தற்போதைய காலக்கட்டத்தில் ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜோஷ் ஹசில்வுட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசுகிறார்கள். குறிப்பாக துல்லியமாக பந்து வீசும் ஹசில்வுட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்க விரும்பமாட்டேன்’’ என்றார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ள ரோகித் சர்மாவிடம் உங்களது சிறந்த இரட்டை சதம் எது? என்று கேட்டபோது, ‘‘எனது இரட்டை சதங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பு வாய்ந்ததுதான்’’ என்று பதில் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!