கொரோனாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்.. ஆழ்ந்த அனுதாபங்கள் !

செய்தி மூலம் – த பபரே தமிழ்

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரரான ஸபர் சர்பராஸ் கடந்த திங்கட்கிழமை (13) உயிரிழந்திருக்கின்றார்.

ஸபர் சர்பராஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (7) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வந்த நிலையிலையே இந்த உலகினை விட்டுப் பிரிந்திருக்கின்றார். ஸபர் சர்பராஸ் உயிரிழக்கும் போது அவரின் வயது 50 ஆகும்.

பாகிஸ்தானின் பெஷாவர் பிராந்தியத்திற்காக 1988ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை 15 முதல்தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் இடதுகை துடுப்பாட்ட வீரரான ஸபர் சர்பராஸ் 6 லிஸ்ட் – ஏ போட்டிகளிலும் பங்கேற்று கிரிக்கெட் பயிற்சியாளராகவும் கடமை புரிந்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த முதலாவது தொழில்முறை கிரிக்கெட் வீரராகவும் மாறியிருக்கும் ஸபர் சர்பராஸ், கடந்த ஆண்டில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அக்தார் சர்பராஸின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஸபர் சர்பராஸின் இழப்பிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது இரங்கல்களைத் தெரிவித்திருப்பதோடு, அந்நாட்டின் கிரிக்கெட் இரசிகர்களும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!