ரூ.2,800 கோடி இழப்பை சந்திக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட்

இங்கிலாந்தில் பிரபலமான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 12-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது மே 28-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 7 சுற்றுகளை இழக்க வேண்டி உள்ளது. தற்போதைய நிலைமையை பார்த்தால் இந்த ஆண்டுக்கான கவுன்ட்டி போட்டி ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு சென்றிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொரோனா பீதியால் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அங்கிருந்து தாயகம் திரும்பி விட்டது. ஜூன் 4-ந்தேதி உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் தொடங்க சாத்தியமில்லை. நிதியின்றி தவிக்கும் கவுன்ட்டி மற்றும் கிளப் அணிகளுக்கு உதவிட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.580 கோடி ஒதுக்கியுள்ளது.
மற்றொரு பக்கம் சிக்கன நடவடிக்கையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை அடுத்த 3 மாதங்களுக்கு 25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் சம்பளத்திலும் ‘கைவைக்க’ திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன், தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் டோனி அரிஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கொரோனா பரவலால் விளையாட்டு உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசனில் கவுண்டி மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட எந்த போட்டியையும் இங்கிலாந்தில் நடத்த முடியாத நிலை நீடித்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும். அதே சமயம் தற்போது பாதுகாப்புதான் முதலில் முக்கியம். கிரிக்கெட் எல்லாம் 2-ம் பட்சம்தான்.
கிரிக்கெட் வாரிய பணியாளர்களின் ஊதியத்தை ஏற்கனவே குறைக்க முடிவு செய்து விட்டோம். இதேபோல் ஏப்ரல், மே மாதத்திற்கு வீரர்களுக்கான சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளோம். இந்த இக்கட்டான சூழலில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இவற்றில் இருந்து மீள முடியும்’ என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்துக்கு வீரர்களின் தரப்பில் இன்னும் பதில் அனுப்பப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!