கொரோனா வைரஸ்… கிரிக்கெட் உலகில் நிகழ்ந்த முதல் மரணம் !!

By – thepapare.com

இங்கிலாந்தின் கவுண்ட்டி கிரிக்கெட் கழகமான லங்கஷெயர் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளார்.    

இதன்படி, தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா உயிர்கொல்லி வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்த முதலாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

லங்கஷெயர் கழகத்துடன் 1998ஆம் ஆண்டு முதன்முதலாக இணைந்து கொண்ட அவர், 2017 ஏப்ரல் மாதம் தலைவராக பதவியேற்றார். இதன்மூலம் அவர் அந்த கழகத்துடன் சுமார் 22 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, லங்கஷெயர் கழகத்தின் பிரதான மைதானமான ஓல்ட் ட்ரபெர்ட் மைதானத்தை புனர்நிர்மாணிப்பதில் டேவிட் ஹாட்ஜ்கிஸ்  முன்நின்று செயற்பட்டார்.

இதன்காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது.

டேவிட் ஹாட்ஜ்கிஸ்ஸின் மரணம் தொடர்பாக லங்கஷெயர் கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், டேவிட் ஹாட்ஜ்கிஸ் தனித்துவமான முறையில் எமது கழகத்துக்காக சேவையாற்றியுள்ளார்.

பொருளாளர், துணைத் தலைவர், பிற்பாடு தலைவர் என்று முக்கிய பொறுப்புகளை திறம்படக் கையாண்டார்.

அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் குடும்பத்தாரின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லங்கஷெயர் தலைமைச் செயலதிகாரி டேனியல் கிட்னீ வெளியிட்டுள்ள செய்தியில், நான் உடைந்து நொறுங்கிவிட்டேன். என்னுடைய பெரிய நண்பனை இழந்துவிட்டேன் என்று வருந்தியுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸ் கூறும்போது, லங்கஷெயர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான ஒரு அங்கமாகத் திகழ்ந்தார் டேவிட்.  நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கவும், இளையோர்களை பெரிதும் ஊக்குவிக்கவும் நிறைய வேலைத்திட்டங்களை செய்தார் என்றார்.

71 வயதான இவருக்கு ஏற்கெனவே ஒருசில உடல் பிரச்சினைகள் இருந்ததையடுத்து, கெரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!