இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்.. திடீர் முடிவு வெளியாக காரணம் என்ன.?

கோவிட்-19 தொற்று நோயின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலை காரணமாக இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் டெஸ்ட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான தொடர், பிற்காலத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற புரிதலின் அடிப்படையில் இத்தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி காலியில் நடைபெறவிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியின் நடுப்பகுதியில் இங்கிலாந்து அணி இருந்தபோது இந்தச் செய்தி வந்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவிட் -19 தொற்றுநோய் உலகளவில் மோசமடைந்து வருவதாலும், இலங்கை கிரிக்கெட்டுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை ஒத்திவைக்கும் முடிவை எடுத்து இன்று எங்கள் வீரர்களை இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘இலங்கையில் உள்ள எங்கள் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே இரவில் நடந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, தொடரை ஒத்திவைத்து வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடரை மறுபரிசீலனை செய்வதே எங்கள் நோக்கம்’ எனக் கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வருவதற்கு முன்னதாகவே இலங்கை அணி வீரர்களுடன் கை குலுக்க மாட்டோம், இரசிகர்களுடன் செல்பி எடுக்க மாட்டோம் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடனேயே இலங்கைக்கு வந்தது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணி, இலங்கை வந்தது.

இதில் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்திலும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!