மதங்களை சொல்லிக்கொண்டு எமது மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சூதீன்

(துறையூர் தாஸன்)
இன்று நாம் அனைவருக்கும் ஒத்துழைப்பும் புகலிடமும் வழங்க வேண்டிய மக்கள் தலைமையின்
கீழ் ஒன்றுபட அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.என ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கௌரவ ஆரிப் சம்சூதீன் தெரிவித்தார்.
கல்முனை மஸ்ஜிதூன் நூரானியா பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் வைபவம் பள்ளிவாசல்
தலைவர் ஏ.எல்.நாஸார் தலைமையில் இடம்பெற்றபோது(12), அந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் எவ்வித போராட்டத்திற்கும்
ஆயத்தமாகவுள்ளோம்.எமது மக்களின் காணிப்பிரச்சினை மற்றும் அடிப்படை
உரிமைக்காகவும் எங்கு சென்றும் அந்த விடயங்களை பேசுவதற்கு எந்நிலையிலும்
ஆயத்தமாகவுள்ளோம்.
நாங்கள் மாயக்கல்லி மலை பௌத்த பிக்குமாருடன் முரண்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றால் அது எங்கள் தலைவரின் பணிப்பிரைக்கு அமையவே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்க எங்களுடைய தலைமைத்துவம் அங்கு முன் நிற்கின்றது.பாராளுமன்றில் பேசுகின்றோம் என்றால், அது தலைவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே அப் பேச்சு இடம்பெறுகின்றது.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டளைப்படியே நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இது புனிதமான இடம் அரசியல் பேசுவதற்கு உகந்த தருணமில்லையென்றாலும் அரசியலும்
மார்க்க விடயமும் பிரிக்க முடியாததாக கலந்து விட்டது என்ற ஓர் உண்மையை
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியுள்ளது.

எங்களது மக்களின் நில விடயங்களை மத அனுஸ்டானம் எனக் கொண்டு பௌத்த பன்சலையை அமைக்க உங்களது காணிகளை வழங்குகிறோம் என்றும், தீகவாவி பிரதேசத்திற்கு என எடுக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை எமது மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத சந்தர்ப்பத்தில்
இன்னுமின்னும் எங்களுடைய காணிகள் பறிபோகும் நிலையில், இவ்விடத்தில் அரசியல்
சம்பந்தமாக பேசியாக வேண்டும்.
மதங்களை சொல்லிக்கொண்டு எமது மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன.ஆகவே இது
மார்க்க அனுஸ்டானம் இவ்விடத்தில் அரசியல் பேச முடியாது என எவரும் கேள்விக்கு
உட்படுத்த முடியாது என்பதை எடுத்துரைக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.எங்களுக்குள்ளே எவ்வித
பிரிவினைகளுமில்லாமல் முரண்பாடுகளுக்குரிய எந்தக் காரணமும் இல்லாமல் முரண்பாடு
உள்ள சந்தர்ப்பங்களில் அதனை நாம் நிரந்தரமாக அதனை இலகுவாக  பிரித்துக்கொள்ளக்கூடியளவு அதனை உங்களிடமுள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய
வகையில் எமது மனப்பக்குவம் விரிவடைய வேண்டும்.
எனது நம்பிக்கை உனது நம்பிக்கை நான் எனது அனுஸ்டானம் உங்களது அனுஸ்டானங்கள் என ஒரு சில வேறுபாட்டை வைத்துக்கொண்டு எமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தாமல் நாங்கள்
எல்லோரும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடக்கூடிய ஒரு குழாமாக இருந்துகொண்டிருக்கின்றோம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!