“சைட்டத்தை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்ப்பு பேரணி

(எம்.சி.அன்சார்)

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை உடனடியாக மூடிவிடுமாறு கோரியும் அம்பாறை மாவட்ட அரச மருத்துவ மாணவர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், மருத்துவ மாணவர் செயற்பாட்டுக்குழு உட்பட எட்டு அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்த “சைட்டத்தை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளினான எதிர்ப்பு பேரணியும், பொதுக்கூட்டமும் இன்று(07) ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.

அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகளங்கிய பதாதைகளை ஏந்தியவாறு  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்த  ஊர்வலம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுனூடாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான கல்முனை சந்தாங்கேணி மைதானம் வரை சென்றடைந்தது.

“பொய் தீர்வு வேண்டாம் சைட்டம் பொய் திருட்டு பட்டத்தை உடனே இரத்துச் செய்“,”மாலபே சைட்டம் திருட்டபட்டக்கடையை 100வீதம் அரசுடைமையாக்கு”, உயிரின் விலை120 இலட்சமாகுமா”, தரமான சுகாதாரத்தை அமைச்சர் ராஜித ஏப்பமிடுவதா”, “மருத்துவக் கல்வியின் தரத்தை தீர்மானிப்பது அரசியல்வாதிகளா அல்லது பேராசிரியர்களா”, அரச மருத்துவப்பீட மாணவர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கவும்”, ஆட்சி மாற்றம் முதலாளிமார்களை பாதுகாப்பதற்காகவா”, அமைச்சர்களே நீங்கள் முதலாளிகளின் கைப்பொம்மைகளா”, வைத்தியர்களின் தேவைக்கு போலி வைத்தியர்களா தீர்வாகுமா”, சுதந்திரமான சுகாதாரத்தை அழிக்க வேண்டாம்” தடைசெய் தடைசெய் கல்விக் கடையை தடைசெய் இழுத்துமூடு இழுத்துமூடு சைட்டத்தை இழுத்துமூடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டதுடன், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

மருத்தவக் கல்வியை பணத்துக்காக விற்பனை செய்வது பணம் படைத்த முதலாளிமார்களுக்கு செய்யும் ஒரு சலுகையாக அமையும். கல்வியும், சுகாதாரமும் விற்கப்படும் போது அதன் தரம் குறைவாகவே காணப்படும். எனவே, மாலபே சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை உடனடியாக மூடிவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!