1990இல் இருந்த சகல முஸ்லிம் குடியிருப்புகளும் வர்த்தமானி மூலம் விடுவிக்கப்பட வேண்டும்: முசலியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(- பிறவ்ஸ், நாச்சியாதீவு பர்வீன்)
வில்பத்து பகுதியை அண்டிய பிரதேசத்தில், 20 வருடங்களாக மக்கள் குடியிருக்காத காரணத்தினால் வன பரிபாலனத் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் குடியிருப்பு காணிகளை, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை மட்டத்தில் பேசி அதனை விடுவித்துக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வில்பத்து விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்  வியாழக்கிழமை (27) முசலி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, கொண்டச்சி போன்ற பிரதேசங்களிலுள்ள காணிகள் 2012ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன இலாகாவுக்கு சொந்தமான காணியாக அறிவிக்கப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னர் மக்கள் கருத்தறிவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தில் யாரும் முறைப்பாடு செய்யாத காரணத்தினால், அந்த அறிவித்தல் அப்படியே வெளியிடப்பட்டதாக வன பரிபாலனத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொதுவாக வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிப்பதற்கு முன்னர் மக்கள் கருத்தறிவதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த வர்த்தமானி அறிவித்தல் 11 நாட்களிலேயே, அதாவது 3 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, இதுவொரு சட்டத்துக்கு முரணான அறிவிப்பு என்பதை சுட்டிக்காட்டினார். அரச அதிகாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர், 22 வருடங்களால் மக்கள் தங்களது காணிகளில் குடியிருக்காத நிலையில், அவற்றில் வளர்ந்துள்ள காடுகளை வைத்து, 2012ஆம் ஆண்டு சட்டத்துக்கு முரணான வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும்.
முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலமாக வன இலாகாவுக்கு சொந்தமான இடமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, 1990ஆம் ஆண்டு எந்தெந்த பிரதேசங்கள் மக்கள் வசிப்பிடங்களாக காணப்பட்டதோ அவை அனைத்தும் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்படவேண்டும்.
மேற்படி வர்த்தமானி அறிவித்தலை மேலும் நியாயப்படுத்தும் வகையில், அண்மையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். முறையான வழிகாட்டல்கள் இல்லாத நிலையிலேயே இந்த இரு வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
பேராதனை பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் வில்பத்து விவகாரம் தொடர்பில் தெளிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தரவுகளுடன் வழங்கினார்கள். புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை அண்டிய வில்பத்து காட்டுப் பகுதியே அழிக்கப்பட்டிருக்கிறது தவிர, மன்னார் மாவட்டத்தை அண்டிய காட்டுப்பகுதி அழிக்கப்படவில்லை.
மக்கள் குடியிருப்புள்ள மன்னார் மாவட்டத்தின் மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, கொண்டச்சி போன்ற பிரதேசத்தில் எவ்விதமான காடழிப்பும் நடைபெறவில்லை என்பதை அவர்கள் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள விளங்கப்படுத்தினார்கள். அதில் கூறப்பட்ட பல விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் அண்மையில் ஜனாதிபதி செயலாளரை சந்திந்து வில்பத்து விவகாரம் தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காணி திணைக்கள அதிகாரிகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட இடத்துக் அனுப்பி அங்குள்ள பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை சர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அதற்கிணங்கவே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு கருத்து தெரிவித்த அதிகாரிகள் கூறியதாவது,
ஜனாதிபதி செயலாளரின் பணிப்புரைக்கமையை இங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்து, அதனை ஆராய்ந்த பின்னர் அறிக்கை சமர்ப்பிதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். வில்பத்து விவகாரத்தை ஆராய்வதற்காக முதற்தடவையாக இப்படியொரு குழு இங்கு வந்துள்ளது. பிரச்சினைகள் காணப்படும் பிரதேசங்களுக்கும் நாங்கள் நேரடியாக சென்று இங்குள்ள உண்மை நிலவரங்களை ஆராய்ந்து ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளோம். அதன்பின்னர், ஜனாதிபதி செயலாளரின் அறிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் வழங்குவதாக கூறினார்கள்.
இதேவேளை, சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த செயலமர்வை குழப்பும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயலமர்வு நடைபெற்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் அங்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நபவி எழுந்து, ஜனாதிபதியின் செயலாளர் இங்கு ஏன் வரவில்லை என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம், நீங்கள் தற்போதுதான் வந்துவிட்டு விடயம் தெரியாமல் பேசவேண்டாம். ஜனாதிபதி செயலாளர் வருவதாக இங்கு கூறப்படவில்லை. அவர் சார்பான பிரதிநிதிகள் தெளிவான அறிவுறுத்தல்களுடன் இங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்கள் இந்த விடயங்களை அவதானித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்றார். அதன்பின்னர் நபவி எம்.பி. அவ்விடத்தைவிட்டு வெளியேறிச் சென்றார்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த சுபியான் மௌலவி, இது மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு விடயமாகத் தெரியவில்லை. எங்களுக்கு சொல்லப்படாமல் இக்கூட்டம் நடைபெறுகிறது. பிரச்சினையால் பாதிக்கப்பட்ட எங்களை வந்து பார்க்கவில்லை. ஆகவே, முசலி மக்கள் இதனை ஒரு கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துகிறோம் என்று கூறினார். இதனால் கூட்டத்திலிருந்து பலர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு சலசலப்பு நிலை ஏற்பட்டது.
அப்போது எழும்பிய, முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன், இது ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இங்குள்ள உண்மை நிலவரங்களை தெளிவுபடுத்தும் ஒரு செயலமர்வாகும். இது பொதுமக்களுக்கான கூட்டமல்ல. இந்த செயலமர்வை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துகொடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் என்னிடம் அறிவுறுத்தியுள்ளது. இங்கு குழப்பம் விளைவிக்கின்றவர்கள் வெளியேறிச் செல்லலாம் என்று தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கட்சியின் செயலாளர் சுபைர்தீன், ஜெமீல், வி.சி. இஸ்மாயில்,இல்லியாஸ், றியாஸ் சாலி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர். கூட்டத்தை குழப்பிவிட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். அவர்கள் சென்ற பின்னர் செயமர்வு சுமூகமான முறையில் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.
வில்பத்து வன பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி போன்ற பிரதேசங்களின் உண்மை நிலவரங்களை ஜனாதிபதி செயலக அதிகாரிகள், வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காணி திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் நேரில் சென்று உண்மை நிலவரங்களை தெளிவுபடுத்தினார்கள்.
இந்நிகழ்வு பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கோ அல்லது ஊடகவியலாளர்களை அழைத்து அங்கு நடப்பவற்றை காட்டுவதற்கோ ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றல்ல. மாறாக, ஜனாதிபதி செயலாளருக்கு அறிக்கை தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை களத்துக்கு நேரடியாக அழைத்து தெளிவுபடுத்தும் செயற்பாடாகும்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், நபவி, மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறுக், எம்.பி. பாறுக், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள், முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!