அரசியல் இலாபங்களை தேட மக்களை மற்றும் பட்டதாரிகளை பகடைக்காய்களாக ஆக்க வேண்டாம்.

(துறையூர் தாஸன்)
வேலையில்லா பட்டதாரி மாணவர்கள் தொடரான காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் சிங்கள சித்திரை வருடப் பிறப்பென்று, மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் தொடர் போராட்டம் 53 நாட்களை கடந்த நிலையிலும் காரைதீவு பட்டதாரிகளின் தொடர் போராட்டம் 47 ஆவது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் எங்களது பிரச்சினைக்கு உடனடியாக முடிவுகள் எடுக்காதவிடத்து, எங்களது முடிவுகள் விபரீத விளைவுகளாக அமையும்.

ஆகவே அரசியல் இலாபங்களை உழைப்பதற்கு தமிழ்மக்களை மற்றும் பட்டதாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த வேண்டாம். தமிழ் மக்களுக்கான முக்கியமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படாத பட்சத்தில் அரசியலில் இருந்து விடுபட்டு அரசியல் அநாதைகளாக்கப்படுவீர்கள் என்று காரைதீவு வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திலீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையை பார்க்க வந்துட்டம், இனி நம்மட கடமை முடிஞ்சு, இனி நம்ம பட்டதாரிகளை பார்க்கப் போக தேவல என்ற சிந்தனைகளோடு ஓவ்வொரு அரசியல் தலைமைகளும் வந்து போறாங்களே தவிர பட்டதாரிகளாகிய எங்களுக்கு ஆக்கபூர்வமான உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்கணும் பெற்றுக்கொடுத்து மக்கள் மனதிலே நல்ல திடமான இடத்தைப் பிடிக்கணும் என்ற எண்ணத்தோடு ஒருவரும் வருவதாக தெரியவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகளாக இருக்கட்டும் எல்லாத் தலைமைகளும் மக்களுக்கு பிரச்சினை இருக்கோ இல்லையோ எந்த சந்தர்ப்பத்திலும் அவங்க எங்கேயும் எந்த ஒரு இடத்துக்கும் தேர்தல் வியாபாரத்துக்காக, போரதுக்கு மாத்திரம் தயாராக இருக்கிறாங்க. தேர்தல் வியாபாரம் என்பது, எந்தக் கட்சி எந்தெந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்ற நினைப்பில இருப்பாங்களே தவிர மக்களின்ற தேவைகளை அறிந்து மக்களுக்காக செயற்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இருக்கின்றனர்.
தமிழ்த் தலைவராக இருக்கக்கூடிய இரா.சம்பந்தன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஏனையவர்களாக இருக்கட்டும் இன்று வந்து அவர்களாலே மக்களுக்கு முறையான நியாயமான தீர்ப்பு இன்னும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே இன்று தமிழ்த் தலைமையாக இருக்ககூடிய இரா.சம்பந்தன் தேர்தல் காலங்களில் மாத்திரம் ஒவ்வொரு பிரதேசமாக சென்று ஒவ்வொரு மேடைகளிலும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், எங்களுக்குள் வாக்காளித்தால் தான் இனப்பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்று வாக்குப் பிச்சை கேட்கிறதுக்கு மட்டுமே வீதி வீதியாப் போறவங்க, இன்றைக்கு மக்களுக்கு பிரச்சினை என்று வீதியில வந்து இறங்கிய பின்னரும் கூட மக்கள் பிரதிநிதிகளாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் பிரச்சினைக்கு குரல்
கொடுக்காமல் தங்களது அரசியல் வியாபார இலாபங்களை மாத்திரமே தேடிக்கொண்டிருக்கின்றார்கள். மக்களாட்சி நல்லாட்சி என்று சொல்லுறாங்க, நல்லாட்சி மக்களுக்காக செயற்படும் என்று சொன்னதெல்லாம் வார்த்தையாக மட்டும் தான் உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பித்தலாட்டங்களை செய்துகொண்டிருக்காமல் மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது நல்லாட்சியினது கடமையாக அமைய வேண்டும்.
முஸ்லிம் தலைமைகளாக இருக்கக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஸாத் பதியுதீன், அதா உல்லா போன்ற பல்வேறு தலைமைகள் இருக்காங்க, பல்வேறு தலைமைகளும் பிரச்சினைகளை கேட்டு கேட்டு அறிந்தாங்க ஆனால் அவர்களால் சில முடிவுகள் எடுக்கப்பட்டது போல் தெரிஞ்சாலும் கூட சில தலைமைகளால் இன்று முடிவு எடுக்கப்படாமலே உள்ளது. சிறுபான்மை மக்களுக்காக இருக்கக்கூடிய, சிறுபான்மை கட்சிகளான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வீதி வீதியா வந்தவங்க இன்று தெருவோரத்தில் இருக்கும் எங்களின் பிரச்சினைகளை கேட்டறிய முன் வராமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!