கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் உடன் தலையீடு செய்க. கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

Share on facebook
Share on twitter
Share on whatsapp

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப் படவுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த உடன் தலையீடு செய்ய வேண்டுமென் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான மகரூப் போரிக்கை விடுத்துள்ளார். 

ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கிழக்கு மாகாண ஆளுநராக சமீபத்தில் கடமையேற்றுக் கொண்ட தாங்கள் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், குறிப்பாக கல்வி விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அதற்காக எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளதாக நான் உணர்கின்றேன். இது தொடர்பான தகவல்களை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எனவே, இது விடயத்தில் தாங்கள் தலையீடு செய்து கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

கல்வி அமைச்சின் 01/2016 சுற்றறிக்கைக்கமைய கிழக்கு மாகாணத்தில் 2,383 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. 

இதனைவிட பின்வரும் அடிப்படையிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 

1. கிழக்கு மாகாணத்தில் 637 ஆசிரியர்கள் பதில் கடமை புரியும் அதிபர்களாகச் செயற்படுகின்றனர். எனினும் கணக்கெடுப்பில் இவர்கள் ஆசிரியர்களாகக் கருதப் படுகின்றனர்.

2. பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பதில் ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள் போன்ற பதவிகளில் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களும் ஆசிரியர்களாகவே கணக்கெடுக்கப்படுகின்றனர். 

3. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சம்பளமற்ற விடுமுறையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்றுள்ளனர். இவர்களும் கிழக்கு மாகாண ஆசிரியர் பட்டியலில் உள்ளனர். 

4. இதனைவிட 2016 க்குப் பின்னர் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் பல புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. பல பாடசாலைகள் 11 ஆம் ஆண்டு வரை தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும், தற்போது அமுலில் உள்ள ஆளணி சுற்றறிக்கைக்குள் இவற்றுக்குத் தேவையான ஆசிரியர் விபரம்  உள்வாங்கப் படவில்லை.

5. இதன்படி கணக்கிட்டால் மேலே குறிப்பிட்ட 2,383 ஐ விட இன்னும் 1,300 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளன.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் பட்டியலின்படி கிழக்கு மாகாணத்துக்கு 512 பேரின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதிலுள்ள அநீதியை தங்களுக்கு முன் வைக்கிறேன்.

1. கிழக்குக்கு வந்துள்ள பெயர்ப் பட்டியலின்படி எந்தவொரு விஞ்ஞான ஆசிரியரும் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப் படவில்லை. எனினும், திருகோணமலை கல்வி வலயத்தில் 18 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 10 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 22 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 02 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் வெற்றிடம் நிலவுகின்றது. இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 52 விஞ்ஞான ஆசிரியர்களுக்கு வெற்றிடம் உள்ளது. 

2. அதேபோல தமிழ்மொழி பாடத்திற்கு திருகோணமலை கல்வி வலயத்தில் 31  ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 31 ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 09 ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 06 ஆசிரியர்களுக்கும், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் 1 ஆசிரியருக்கும் வெற்றிடம் நிலவுகின்றது. இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 78 தமிழ் பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் பாட ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

இவை போல இன்னும் பல பாடங்களுக்கு பல பாடசாலைகளில் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்படவுள்ளமை மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். 

7 வருடத்துக்கு முன்னைய சுற்றறிக்கையின் படியான கணக்கெடுப்பை மையமாக வைத்து தற்போது நடவடிக்கை எடுப்பது கல்வித்துறை எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 

இது மேன்iமை தங்கிய ஜனாதிபதி அவர்கள் கல்வித்துறை மூலம் நாட்டின் மறுமலர்ச்சியை ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு பாரிய தடையை ஏற்படுத்தும் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சார்பாக தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது விடயத்தில் தங்களது உடனடி நடவடிக்கையை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives