சம்மாந்துறையில் 45 நாட்களாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறையில் 45 நாட்களாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஜமாலியா வித்யாலயத்தில் கல்வி கற்கும் ஒன்பது மாணவர்கள் கடந்த 45 நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் தமது கல்வியை இழந்த நிலையில் நிர்கதியாகியுள்ளனர். 

இந்த மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி உரிமையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்து உள்ளார்கள் என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை (06) சம்மாந்துறையில் நடைபெற்றது. இதன் போது பெற்றோர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.றிஸ்விகான் கருத்து தெரிவிக்கும் போது,

சுமார் ஒரு வருடங்களுக்கு முதல் குறித்த ஜமாலியா பாடசாலையில் 45 லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைத் திட்டத்தின் போது பாடசாலையின் அதிபருக்கும் பாடசாலை மாணவர்களின் பெற்றோராகிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களாகிய எமக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. குறித்த வேலை திட்டத்தை பிறிதொரு பாடசாலை நிர்வாகத்தினர் செய்து விட்டு தாம் செய்ததாக கூட்டறிக்கைகளில் கையொப்பமிடும்படி பாடசாலை அதிபர் வேண்டிக் கொண்டதை தான் ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலகம், மாகாண கல்விப் பணிமனை, அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என நாம் பலரிடமும் முறைப்பாடுகளை செய்தும் தமக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை.

இந்நிலையில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த எமது பிள்ளைகளின் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டுக்களை சொல்லி அவர்களை தொடர்ச்சியாக பழிவாங்கும் செயற்பாடுகள் பாடசாலையில் இடம் பெற்று வருகின்றன. எனக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எமது பிள்ளைகளின் புத்தகப் பைக்குள் போதைப் பொருட்களை வைத்துவிட்டு எம்மீது குற்றம் சுமத்தலாம் என்ற உள்ளச்சம், பயம் காரணமாக கடந்த 45 நாட்களாக எமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நெருக்கடியான சூழல் மற்றும் மன உளைச்சல்களோடு வீடுகளுக்குள் உறைந்துபோய் உள்ளார்கள்.

கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர் என அனைவருக்கும் தனித்தனியாக மாகாண கல்வி பணிப்பாளரின் விசாரணை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. எனினும் இதுவரை எமக்கு எதுவித தீர்வும் கிடைக்கவில்லை.

குறித்த பாடசாலையின் அமைவிடத்திற்கருகில் 150 மீட்டர் தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் பிறிதொரு பாடசாலைக்கு இடம் மாற்றுவதிலும் பார்க்க ஊழல் மோசடியில் சிக்குண்டு தவிக்கும் பாடசாலையின் அதிபரை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி தீர்வை பெற்றுத் தரும் வரை வேறு ஒரு பாடசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தராத பட்சத்தில் தமது பிள்ளைகளும் நாமும் கல்வி உரிமையை பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம் என்றும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives