“இறக்காமத்து விவகாரம்”: குழுக்களாகத் தர்க்கிக்காமல் மக்கள் குணமடையப் பிரார்த்திப்போம் – ஏ.எல்.எம். அதாஉல்லா

இறக்காமத்து மக்களின் இன்றைய வரலாற்று சோகத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். உணவு ஒவ்வாமை காரணமாக நூற்றுக்கணக்கான நம் உடன் பிறப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையைத் தருகின்றது என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அதிகாரத்திலிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள், நம் சமூகத்தின் புத்திஜீவிகள், ஆர்வலர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட  நம்மக்கள் விரைவில் குணமடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணியில், வரலாற்று சோகத்தில் மூழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களிடம் வெறுமனே முகங்காட்டி படம்பிடிக்கின்ற அற்ப நடவடிக்கைகளும் மக்களால் உணரப்பட்டுள்ளது. தாங்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்ற அதிகாரங்களையும் சக்திகளையும் மனச்சாட்சியோடு  செயற்படுத்த வேண்டியுள்ளது. நம் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு இக்காலத்தில் இன்றியமையாத ஒன்றாகும். வரலாறும் உங்களைப் பற்றிப் பேசவேண்டும்.
இது ஒருபுறமிருக்க கந்தூரி என்ற பெயரில் குறிப்பிட்ட உணவு தயாரிக்கப்பட்டதனால் கந்தூரி முறைக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் கூறப்பட்டு  முகநூலில் யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் இவ்வாறான தர்க்கமானது, நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு  ஆரோக்கியமாக அமையமாட்டாது என்பதனை நம் புத்திஜீவிகள் மாத்திரமன்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்து மோதலானது முஸ்லிம்களை மார்க்க ரீதியில் பிளவுபடுத்தி அக்குழுக்களுக்குள் மோதலைத்தூண்டி நம் மக்களை சீரழிப்பதற்கு வழி சமைக்கக்கூடும். மறைகரமாகத் தொழிற்படும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு இப்பிளவு தீனி போட்டதாக அமைந்துவிடும்.  (அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக).
எனவே குறிப்பிட்ட கந்தூரி, அதன் பின்னணியில் உள்ளவைகள் அல்லது நம்மவரின் கவனயீனம் என்பவைகள் நமது புத்திஜீவிகளால் கவனமாக ஆராயப்படுதல் வேண்டும். ஏனெனில் வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு நம் பாரம்பரியக் கந்தூரிகளில் நிகழ்ந்திருக்கவில்லை. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறேன்.
புத்திஜீவிகளே! – சமூக ஆர்வலர்களே!
கந்தூரி தொடர்பில் மட்டுமன்றி இதுபோன்ற இன்னும் பல இஸ்லாமியக் கடமைகள் தொடர்பாகவும் தர்க்கிப்பதிலிருந்து நம் இளைஞர்களை நிறுத்துமாறு அறைகூவுங்கள். “தர்க்கிப்பதற்கு இது உகந்த நேரமில்லை”. என்பதனை உறைக்கச் சொல்லுங்கள். வெவ்வேறு இயக்கக் கூடாரங்களில் உள்ளவர்களும் இவ்விடயத்தில் கவனமாகத் தொழிற்பட வேண்டுமென்று அவர்களை உணரச் செய்யுங்கள். குறிப்பாக இது தொடர்பில் முகநூலில் எழுதுகின்ற எழுதுநர்களை அன்பாய் அறிவுறுத்துங்கள். இது இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தவருக்கு  இன்றியமையாதது என்பதனையும் அவர்களுக்கு அழுத்திச் சொல்லுங்கள் – என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!