மஹிந்த பிரபல்யமடைந்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ


(பீ.எப்.எம் றிஷாட்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து உச்சத்தில் இருந்தாலும் அல்லது அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டாலும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் பெரும்பாண்மை ஆதரவு கிடைத்து வெற்றிபெற முடியாது.அதற்கு கட்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பு செய்து அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிலாபம் தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இன்று மிகவும் சிறிய கட்சியாக உள்ளோம்.எனினும் 80 வருட வரலாற்றைக் கொண்ட இந்நாட்டின் இரு பிரதான கட்சிகளை விடவும் நாம் சிறப்பான முறையில் கட்சியின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பலமிக்க கட்சியாக மாறி வருகின்றோம்.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களையும், மலையக மக்களையும் எமது கட்சியின் கீழ் நிச்சயம் கொண்டு வருவோம்.குறிப்பாக அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு வருகின்றமை எமது கட்சியை நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் பிரபல்யப்படுத்துவதற்கும் சிறந்த தருணமாக உள்ளது.அதற்கான பிரதிபலன்களை நிச்சயம் அடுத்துவரும் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவோம்.இன்று கிராமப்புறங்களில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கிடையாது.முழு கிராமமும் பாலடைந்து சென்றுள்ளது.உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகித்தவர்களே இந்த கிராமங்கள் அனைத்தையும் அபிவிருத்தி செய்தார்கள்.எனினும் இவ் உள்ளூராட்சி முறைமை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டாலும், எதிர்வரும் காலத்தில் நிச்சயம் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் மீண்டும் கொண்டு செல்ல ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்நின்று செயற்படும் என தெரிவித்தார்.
இன்று நாட்டை பிரதான இரண்டு கட்சிகளும் ஆளுகின்றன. அபிவிருத்தி முடக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. தற்போதைய அரசு நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்தே ஆட்சி செய்கின்றது.
மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அரசியல் பழிவாங்கல்களே அதிகமாக இடம்பெறுகிறது. இந்த ஆட்சியின் மீது மக்களின் வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
தற்போதைய சூழலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாண்டி மக்களின் ஆதரவு எமக்கே அதிகமாக உள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதற்கான களமாக அமையும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!