‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் உரை!

-சுஐப் எம்.காசிம்-

புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்துக்கான திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற, இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவரப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த புதிய திருத்தமானது இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவதுடன், எமது ஏற்றுமதி வருவாய்களை அதிகரிப்பதற்கும், ஏனைய நாடுகளில் இருந்து போலியான ஏற்றுமதிகளை தடை செய்வதற்கும் வழி சமைக்கும் என நம்புகின்றேன்.

இவ்வாறான போலியான ஏற்றுமதிகளினால் இலங்கையின் நிஜமான ஏற்றுமதிகளுக்கு உலகளாவிய ரீதியில் பாதிப்பு ஏற்படுகின்றது. ஒரு புவிசார் குறியீடு (Geographical Indication) ஒரு பொருள் எந்த நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ உற்பத்தி செய்யப்பட்டது என்பதையும், அதற்கான விஷேட தகைமைகளையும், பண்புகளையும் வெளிப்படுத்தும் ஓர் அடையாளமாக இருக்கின்றது.

புவிசார் குறியீடு காரணமாக ஒரு பொருளுக்கு விஷேட அம்சங்கள் அமைகின்றபடியால், அவைகளுக்கு உயர்ந்த பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பெறுமதி இருப்பதுடன், அவைகள் உற்பத்தியாகும் சொந்த நாடுகளுக்கு சொத்தாகவும் அமைகின்றது. அத்துடன் இந்த உற்பத்திகளுக்கு புதிய பெறுமதி செயற்கைகளை அதிகரிப்பதற்கும், சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பதற்கும் வழி வகுக்கின்றது. இதன் காரணமாக இலங்கை பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் மதிப்பும், கேள்வி அதிகரிப்பும் ஏற்படுகின்றது.

இலங்கை தேயிலை, இலங்கை கருவா ஆகியன இலங்கையிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் என 2003ஆம் ஆண்டில் 36ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான இலங்கை தேயிலை (Pure Ceylon Tea), ஸ்ரீலங்கா தேயிலை (SriLanka Tea), தூய்மையான ஸ்ரீலங்கா தேயிலை (Pure Sri Lanka Tea),  தூய்மையான இலங்கை கருவா (Pure Ceylon Cinnamon), ஸ்ரீலங்கா கருவா (Sri Lanka Cinnamon), தூய்மையான ஸ்ரீலங்கா கருவா (Pure Sri Lanka Cinnamon), ஸ்ரீ லங்கா குருந்து (Sri Lanka Kurundu) ஆகியன இலங்கையின் பொருளாதாரத்தில் காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றன.

உற்பத்திகளுக்கான பூகோள சந்தையில் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கையானது புவிசார் குறியீட்டின் விளைவினால் எமது நாட்டுக்கு சாதகமான பயனளித்து வருகின்றது. எனவே, புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் தன்மையான உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த திருத்தம் வழிவகுக்கும்.

இலங்கையானது புலமைச் சொத்துக்கள் தொடர்பிலே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அதனை மேலும் வலுவாக்கி போலிகளை முறியடிப்பதற்காகவே இதனை சட்டமாக்க வேண்டிய நிலை உள்ளது.

இலங்கையின் புவிசார் குறியீடுகளை பாதுகாப்பதற்கான பொறிமுறைகள் கைத்தொழில் வர்த்தக அமைச்சினால் நியமிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழு வடிவமைத்துள்ளது. புலமைச்சொத்துக்கள் தொடர்பான ஆலோசனை ஆணைக்குழு அங்கத்தவர்கள் உள்ளடங்கிய, பல்வேறு நிறுவனங்கள் சார்ந்த அதிகாரிகளைக் கொண்ட இந்த செயற்பாட்டுக் குழு, பதிவு செய்யும் முறைகளினூடாக இலங்கையின் புவிசார் குறியீடுகளை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இலங்கை கருவா, இலங்கை தேயிலை அவை தொடர்பான உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைகளை இந்த செயற்பாட்டுக் குழு அடையாளப்படுத்தி உள்ளது. நாட்டின் உண்மையான உற்பத்தியை உள்நாட்டில் பதிவு செய்வதுடன், வெளிநாடுகளிலும் புவிசார் குறியீடுகளுக்கான சர்வதேசப் பதிவுகளை மேற்கொள்வதன் மூலம், போலியான ஏற்றுமதிப் பொருட்களை பிரித்தறிவதே இந்த செயற்பாட்டுக் குழுவின் நோக்கமாகும்.

2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்தின் உத்தேச சட்டத் திருத்தமானது, 2017 ஆம் ஆண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு இந்த மேலான சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படுகின்றது.

 

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கும் இந்த புவிசார் குறியீடானது பாரிய பெறுமான அதிகரிப்பை வழங்குகின்றது. அத்துடன் இலங்கை தேயிலை மற்றும் இலங்கை கருவா ஆகியவற்றின் தூய்மையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கும் இந்தச் சட்டத் திருத்தம் பாதுகாப்பைத் தரும் என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!