கொழும்பு அரசியலில் நடப்பதென்ன..?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவாரா இல்லையா என்பதுதான் நாட்டில் இப்போது பேச்சு..

நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் ஜனாதிபதி மாளிகையில் கோட்டா , மஹிந்த ,சமல் ,பெசில் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனைகளை நடத்தினர்…

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகவேண்டும் என்பதுதான் சமல் ,கோட்டாவின் கோரிக்கை..

என்றும் பெரிய அண்ணனின் சொல்லைத் தட்டாத மஹிந்த .அதற்கு சம்மதித்த போதும் , பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலக கூடாதென்று பிடிவாதமாய் இருந்திருக்கிறார் பெசில் …

‘கம்மன்பில 120 எம்.பிக்கள் இருப்பதாக சொல்வது எம்மை அச்சுறுத்தவே..அப்படி இருந்தால் அவர்கள் காட்டட்டும்..எங்களுக்கு 105 பேருக்கும் மேல் ஆதரவுள்ளது.தமிழ்க் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காது என்று அறிந்தேன். எமக்கு ஆதரவளிக்கும் எம்,பிக்கள் எண்ணிக்கை இன்னும் கூடும்.நாடாளுமன்றம் கூட முன்னர் அதனை நான் செய்வேன்.அதுவரை பதவியை இராஜினாமா செய்யவேண்டாம் ” என்று இங்கு பெசில் ஆவேசமாக பேசியதாக தகவல்.

ஆனால் பிரதமர் கௌரவமாக பதவி விலகினால் நல்லது என்று விளக்கிய சமல் ,அப்படி நடந்தால் இப்போது உள்ள மக்களின் போராட்டம் கொஞ்சம் தணியும் என்ற சாரப்பட பதிலளித்துள்ளார்.

”முதலில் பிரதமரை அகற்றி பின்னர் சில வாரங்களில் சபாநாயகரையும் அகற்றி ஜனாதிபதியையும் குற்றவியல் பிரேரணையில் அகற்ற முயலுவார்கள்…பிறகு பெரும் விளைவுகள் வரலாம்..” என்று அதற்கு பதிலளித்துள்ளார் பெசில்..

பிரதமர் பதவி விலக மாநாயக்க தேரர்மார் கேட்பதால் ,அப்படி நடக்காதபட்சத்தில் அவர்கள் தங்களை சந்திப்புகளுக்கு நேரம்கூட தராத நிலைமை வரலாம்.அது மக்கள் எதிர்ப்புக்கு மேலும் வலுவூட்டும் என்று இங்கு பேசப்பட்டது..

‘நான் பதவி விலக மாட்டேன்.நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றி என்னை விலக்கட்டும்.நான் எதிர்க்கட்சியில் சென்று அமர்கிறேன்.எனக்கு எதிராக வாக்களிப்போரையும் நான் நேரடியாக பார்க்க ஆசைப்படுகிறேன்..எதிர்க்கட்சியில் இருந்து நான் அரசியல் செய்வேன்.நான் என்னசெய்வேன் என்பதை அப்போது பாருங்கள்..’ .என்று இங்கு குறிப்பிட்ட பிரதமர் ,இப்போது பலரின் உண்மை முகங்கள் அம்பலமாகியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க ,

மறுபக்கம் டலஸ் ,மைத்ரி உட்பட்டோர் நகர்த்திவரும் காய்கள் அவர்களுக்கு வெற்றியை தந்துள்ளதாக தெரிகிறது..

22 அமைச்சர்கள்…அதனை கண்காணித்து ஆலோசனை வழங்க தேசிய நிர்வாக சபை… இடைக்கால அரசு இதுதான்…. தேசிய சபையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள்.. அமைச்சரவையில் தகுதியானவர்களுக்கு இடம்… என்று பேச்சு நடத்தப்படுகின்றது.

இந்த பேச்சுகள் குறித்தான தகவல்கள் அவ்வப்போது ஜனாதிபதியின் காதுகளுக்கு அனுப்பப்படுகின்றன.அதேசமயம் பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.அவர்களில் ஒருதரப்பு நாளை புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து கடிதமொன்றை கையளித்து புதிய இடைக்கால அரசை அமையுங்கள் என்று கேட்கப்போகின்றனர்…

கோட்டா – மஹிந்த உறவில் விரிசல்…

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி தம்பிக்கும் பிரதமர் அண்ணனுக்குமிடையில் பெரும் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது..
பொதுஜன பெரமுன எம்.பிக்களின் டபல் கேமும் இதற்கொரு காரணம். உதாரணத்திற்கு இன்று காலை அலரி மாளிகையில் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ இன்று மாலை இடைக்கால அரசு தேவையெனவும் பெரும்பாலான எம்.பிக்களின் ஆதரவு அதற்குள்ளதாகவும் அறிக்கை விடுகிறார்.

இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி இஷ்டப்படுகிறார் என்பதால் அவரை சந்திக்கும்போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் ,பின்னர் பிரதமர் தொலைபேசி அழைப்பெடுத்தால் பிறந்தார் பதவியை தொடர அவருக்கு ஆதரவை தெரிவிப்பதும் பொதுஜன பெரமுன எம்.பிக்களுக்கு வாடிக்கையாகி இருக்கிறது…

இதற்கிடையில் இந்தியாவும் சீனாவும் இலங்கை அரசியலில் புகுந்து விளையாடுகின்றன..ஜனாதிபதி பக்கம் இந்தியா நிற்கிறது. பிரதமர் பக்கம் சீனா நிற்கிறது என்று பேசப்படுகிறது.இதனால் கொழும்பில் இப்போது எம்.பி ஒருவரின் விலை தலைக்கு பல கோடிகள் என்ற ரீதியில் பேசப்படுகின்றன.அதுவும் டொலர்களில்..

கோட்டாவா ,மஹிந்தவா வெல்வார் என்று பேசப்பட்டு இப்போது அது இந்தியாவா ,சீனாவா என்று பேசுமளவுக்கு வந்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் ,பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிடும் எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகம் (113 தாண்டி )வந்தாலும்கூட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்படும் நாளில் அந்த எம்.பிக்கள் நாடாளுமன்றம் வரவில்லையெனில் கதை கந்தல்தான்…

இப்போதைய நிலைவரப்படி விமல் ,கம்மன்பில அணியின் கைகள் ஓங்கியிருக்கின்றன.அதற்கு காரணம் பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியுள்ளனர்.
விமல் இருக்கும் இடத்திற்கு எவன் போவான் ?என்று கேட்பது தமிழ் முஸ்லிம் எம்.பிக்கள் மட்டுமே.ஆனால் விமல் ,கம்மன்பிலவின் வாய்வார்த்தைகளை அறிந்த தென்னிலங்கை எம்.பி மார் அவர்களை பகைத்து மக்களிடம் சென்றுவிடமுடியாது என்றே கருதுவது தெரிகிறது….

எம்.பிக்களின் ஆதரவை பெற நடத்தும் பேச்சுக்களின் போதெல்லாம் ,” ஊருக்கும் தொகுதிக்கும் எப்படி செல்வீர்கள்? எப்படி மக்களை சந்திப்பீர்கள் என்பதை யோசியுங்கள்…”என்று கூறி அச்சத்தை உண்டுபண்ணியே பேச்சை ஆரம்பிக்கிறது விமல் அணி… இதனால் ஊர்ப்புற எம்.பிக்கள் பலர் விமல் ,கம்மன்பில பின்னால் திரண்டுள்ளனர்…

இந்த நெருக்கடி சூழலில் ,முக்கியமான அரச அதிகாரிகள் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளனர்.அவர்கள் திரும்பி வருவார்களா என்பது தெரியவில்லை…அது தவிர அரச தலைவர்கள் பக்கத்தில் இருந்த அதிகாரிகள் இப்போது அலுவலகங்களுக்கு வருவதே குறைவு… பலர் அடுத்த நகர்வுகளுக்கு ஆயத்தமாகி செட் ஆகியுள்ளனர்…

நாடாளுமன்றம் கூட முன்னர் பல மாற்றங்கள் வரும் வாய்ப்பே இருக்கிறது.இடைக்கால அரசை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மிக உறுதியாக இருக்கிறார். அதில் மாற்றமில்லை.

அப்படி அவர் செய்தால் இடைக்கால அரசு குறித்தான தங்களது கோரிக்கைக்கு மதிப்பளித்தார் என்று கருதி, மாநாயக்க தேரர்கள் காலிமுகத்திடலுக்கு வரலாம்.. ஜனாதிபதி வீடு செல்லக்கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி உத்தரவாதமொன்றை ஜனாதிபதி சார்பில் வழங்கலாம்…மாநாயக்க தேரர்களின் பேச்சை தட்ட முடியாத நிலைமை போராட்டக்காரர்களுக்கு ஏற்படலாம்…

நாளை புதன்கிழமை ,பொதுஜன பெரமுன எம்.பிக்கள் பெரும்பான்மையானோர் கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்தால் இடைக்கால அரசை ஏற்படுத்த பச்சைக்கொடி காட்டுவார் கோட்டா.
ஆனால் பிரதமரை பதவி நீக்கம் செய்யமாட்டார் ஜனாதிபதி..ஏனெனில் இடைக்கால அரசின் பிரதமர் ஒருவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தால் மஹிந்தவின் பிரதமர் பதவி வலுவற்றதாகிவிடும்…

இடைக்கால அரசில் சில அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வரவுள்ளன…சில அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்..பாதுகாப்பும் ஊடகமும் ஜனாதிபதியின் கீழ் அல்லது அவர் சொல்பவருக்கு வழங்கப்படவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது…

சஜித் ஏன் இடைக்கால அரசை நிராகரிக்கிறார்..?

இடைக்கால அரசில் பதவியேற்றால் ,மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடுவார்.இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்க முடியாமற்போக ,மக்கள் ஆதரவும் இல்லை ,எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இல்லையென்றாகிவிடும் என்று கருதுகிறார் சஜித்…

அதற்குள் சம்பிக்க தனக்கென ஒரு அணியை திரட்டிக்கொண்டிருக்கிறார்..இடைக்கால அரசில் பிரதமர் பதவியை சம்பிக்கவுக்கு வழங்குமாறு ஒரு தரப்பு கேட்டபோது ஜனாதிபதி அதற்கு சம்மதிக்கவில்லை.ஆனால் பொன்சேகாவுக்கு முக்கிய அமைச்சொன்றை கொடுக்கலாமென்று ஆலோசிக்கப்பட்டுள்ளது…

நாளை தொடரும்..

(சிரேஷ்ட ஊடகவியலாளர் – ஆர்.சிவராஜா)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!